கார் ஏற்றி இருவர் கொல்லப்பட்ட வழக்கு... சிரித்து கொண்டே மிரட்டிய பாகிஸ்தான் பெண்ணின் பகீர் பின்னணி!
சொகுசு கார் மோதி உயிரிழப்புகள் ஏற்படுவது உலகம் முழுவதும் தொடர்ந்துவருகிறது. ஆனால் பாகிஸ்தானில் நடந்த சம்பவத்தில் விபத்து ஏற்படுத்திய பெண் உயிரிழப்புகளை பற்றி கவலைப்படாமல் சிரிக்கும் காணொளி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடாஷா டேனிஷ் அலி பாகிஸ்தானின் கராச்சியை பூர்வீகமாக கொண்டவர். 32 வயதாகும் நடாஷா பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் டேனிஷ் இக்பாலின் மனைவி ஆவார். டேனிஷ் இக்பால் 'குல் அகமது எனர்ஜி லிமிடெட்' மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், மெட்ரோ பவர் குழுமத்தின் தலைவராகவும் உள்ளார்.
நடாஷா- டேனிஷ் தம்பதி கராச்சியில் வசிக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி நடாஷா கர்சாஸ் சாலையில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரை ஓட்டிச் சென்றார். வேகமாக காரை திரும்ப முயன்றார். அப்போது அவருக்கு முன்பு சென்று சென்று கொண்டிருந்த பைக், அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகள் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த கார் உட்பட பல வாகனங்களை அவரின் கார் மோதியது.
இந்த விபத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த தந்தை மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருக்கும் ஒருவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் நடந்து சற்று நேரத்தில் அங்கிருந்த மக்கள் காரை சுற்றி வளைத்தனர். சம்பவ இடத்துக்குப் போலீஸும் வந்துவிட்டது. நடாஷாவை மக்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் அங்கிருக்கும் மக்களை நோக்கி, என் அப்பா யார் என்று தெரியுமா என்று மிரட்டும் தொணியில் கூறி சிரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடாஷாவை சுற்றி அவரை பாதுகாக்க சில பாதுகாவலர்கள் நின்று கொண்டிருந்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
நடாஷா மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் அவர் தரப்பு வழக்கறிஞர் விளக்கம் கொடுத்தார். சில ஊடகங்களில் அவர் போதைப் பொருள் உட்கொண்டதால் விபத்து ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியானது.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்த நிலையில் நடாஷாவை பற்றி சில முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் மனம் சார்ந்த பிரச்னைக்கு சிகிச்சை எடுத்து வந்தது உண்மை தான் என்றும், ஆனால் அவர் முழுவதுமாக குணமடைந்துவிட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அவர் தற்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த இம்ரான் , அம்னா ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு #JusticeForImranAndAmna #karachiAccident என்ற ஹேஷ் டேக்குகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.