கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் குடும்பத்திற்கு எதற்கு உதவி? - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சமும் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் நிதி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எதிப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பிரேமலதா பேசினார். அப்போது, கள்ளக்குறிச்சியில் விஷச்சாரயம் அருந்தி உயிரிழந்தவர்களை நினைத்து வேதனை தெரிவித்த அவர். இவர்களுக்கு எதற்கு நிதி என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது போன்ற செயலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நிதி கொடுப்பது தவறானது என்றும் மேலும் நிதி கொடுப்பது கள்ளச்சாராயம் அறுந்துபவர்களை ஊக்கவிப்பதுப்போல் உள்ளது. முதலமைச்சர் கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கிறாரா? இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
கள்ளச்சாராய உயிரிழப்பைத் தடுக்க அதிகாரிகளை மாற்றுவதோ, ரூ.10 லட்சம் கொடுப்பதோ தீர்வாகாது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களோடு அரசாங்கமும் காவல் துறையும் கைகோத்துக்கொண்டு ஊக்கப்படுத்துகிறார்களே தவிர, அதைத் தடுப்பதில்லை. கடந்த காலங்களில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்ததால் அதை சரி செய்வீர்கள் என்று தான் உங்களுக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தார்கள். கடந்த காலத்துடன் ஒப்பிட்டு பாதிப்பு குறைவு என்று கூறுவதற்காக ஸ்டாலினுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை" என்றார்.
மற்ற தலைவர்கள் எல்லாம் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதி தரக்கூடாது என்று பிரேமலதா கூறுவது மக்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது!