காங்கிரஸ் கூட்டத்தில் திமுக-வுக்கு எதிர்ப்பா… செல்வப்பெருந்தகையின் கலகக்குரல் கூட்டணிக்குள் கலக்கத்தை ஏற்படுத்துமா?
2004 முதல் தொடர்ந்து திமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை சந்தித்துவருகிறது காங்கிரஸ். அதில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 9 இடங்களில் தேனியில் மட்டும் ஈவிகேஸ் இளங்கோவன் தோல்வியடைய, மற்ற எட்டு இடங்களிலும் வெற்றிபெற்று 8 எம்பிக்களை தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு அனுப்பிவைத்தது காங்கிரஸ். இந்தமுறை தமிழக காங்கிரஸின் வெற்றி சதவிகிதம் 100 சதவிகிதத்தை எட்டியது. போட்டியிட்ட 9 இடங்களிலுமே காங்கிரஸ் வேட்பாளார்கள் வெற்றிபெற்றனர்.
இந்த சூழலில் ஜூன் 11-ம் தேதி காலை தமிழ்நாடு காங்கிரஸின் பொதுக்குழு கூட்டம் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, கே.எஸ்.அழகிரி, பீட்டர் அல்போன்ஸ் எனப்பலரும் கலந்துகொண்டர். இந்தக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஏழு தீர்மானத்தில் ஐந்தாவது தீர்மானமாக காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் வலுப்படுத்த உரிய செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும், இதற்கு செல்வப்பெருந்தகை என்ன வியூகம் அமைக்கிறாரோ அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்லப்பெருந்தகை ‘’நாம் இன்னும் எத்தனைக் காலம் பிறரைச் சார்ந்திருக்கப்போகிறோம். இப்படியே சார்ந்திருக்கப்போகிறோமா அல்லது சுயமாக இருக்கப்போகிறோமா என்கிற கேள்வி எழுகிறது. அதற்கான பதிலை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்’’ என்றுபேசிவிட்டு இறங்க மற்ற தலைவர்கள் பேச ஆரம்பித்தனர்.
அப்போது மைக் பிடித்த ஈவிகேஸ் இளங்கோவன் ‘’இன்று தமிழகத்திலே 40 தொகுதிகளை வென்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தலைவர் ஸ்டாலினும்தான். முன்னர் தனித்து நின்று கன்னியாகுமரியிலும், சிவகங்கையிலும் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். டெபாசிட்டை இழந்தோம். யாருக்கு இங்கு காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்ல ஆசையிருக்காது. அதைவிட முக்கியம் நம்முடைய எதிரியை வீழ்த்தவேண்டும் என்பதுதான். அதைவிட்டுவிட்டு நான்தான் வெல்வேன், நான்தான் தனியாக நிற்பேன், நான்தான் தோற்பேன் என்று பேசினால் அது உங்கள் இஷ்டம்’’ என்று அந்த மேடையிலேயே செல்வப்பெருந்தகையின் கருத்துக்கு எதிராகப்பேச சலசலப்பு எழுந்தது.
இந்தச் சூழலில் இரண்டாவது முறையாக மைக்கைப் பிடித்த செல்வப்பெருந்தகை ஈவிகேஸ் இளங்கோவனுக்கு பதில் சொல்லத் தொடங்கினார். ‘’நாம் எங்கு இருக்கிறோமோ அங்கே விசுவாசமாக இருப்போம். காங்கிரஸ் கட்சி நன்றியோடு இருக்கும். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் குரல் கொடுப்பேன். தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின் மீது அன்பும், பற்றும் மரியாதையும் எனக்கு இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கென்று தனிப்பட்ட கொள்கை, கோட்பாடு இருக்கிறது. கூட்டணி கோட்பாட்டுக்காக என்னுடைய கோட்பாட்டை பற்றி பேசக்கூடாது என்று சொன்னால் அது தவறு. காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று சொல்வது என்னுடைய தார்மீக உரிமை. நாங்கள் தோழமையாக இருக்கிறோம் அதனால் நாங்கள் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை அமைக்கமாட்டோம் என்று பேசினால் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களே நம்மை ரசிக்கமாட்டார்கள். நம்முடைய கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். வாக்கு வங்கியை அதிகரிக்கவேண்டும். வாக்கு வங்கியை அதிகரிக்காமல் கூட்டணி கட்சிகள் நம்மை மதிப்பதில்லை எனப்பேசுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. குரலற்றவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கட்சிதான் காங்கிரஸ். அப்படிப்பட்ட கட்சியினரை குரலே எழுப்பக்கூடாது என்று சொன்னால் அது அநீதி’’ என்று பேசினார்.
காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் எழுந்திருக்கும் இந்த கலகக்குரல் தமிழக அரசியலில் என்னென்ன எதிர்வினைகளைக் கொண்டுவரப்போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்!