எடப்பாடி பழனிசாமி Vs அண்ணாமலை… வாயால் வடை சுடுபவர் Vs நம்பிக்கை துரோகி… முற்றும் அதிமுக, பாஜக மோதல்!
அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பாஜக-வையும் அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார் பழனிசாமி. இந்நிலையில் பழனிசாமியை நேரடியாக கடுமையாக விமர்சித்துப்பேசியிருக்கிறார் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை.
இன்று காலை கோவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி பத்ரிகையாளர்களிடம் பேசும்போது அண்ணாமலையைத் தாக்கிப்பேசினார். ‘’தமிழ்நாட்டுக்காக என்ன திட்டத்தை மத்திய அரசின் மூலமாக பெற்றுத் தந்திருக்கிறார் அண்ணாமலை? எதுவுமே கிடையாது. எப்போது பார்த்தாலும் பொய் செய்திகளைக் கூறி, வாயிலேயே வடை சுடுகிறார். இப்படிப்பட்டவர் பாஜகவில் இருப்பதால்தான், 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜக, இப்போது கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்திருக்கிறது’’ என்று விமர்சித்து பேசினார்.
இதற்கு பதில்சொல்லும்விதமாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருக்கிறார் அண்ணாமலை. விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர் ‘’எடப்பாடி பழனிசாமி தன் சுயலாபத்துக்காக கட்சியையும் தொண்டர்களையும் எல்லோரது கண்முன்பாகவே அழித்துவிட்டார். தொண்டர்கள் எல்லாம் மாற்று கட்சியினை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியை நோக்கி வர ஆரம்பித்து விட்டார்கள். அதனுடைய தாக்கம் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு சதவீதம். நம்பிக்கை துரோகி என்கிற பெயர் ஒருவருக்கு பொருந்துமானால் அது எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் பொருந்தும். பழனிசாமி தான் சுயலாபத்துக்காக பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று விலகினார். அதன் விளைவாக தான் நடந்து முடிந்த தேர்தலில் படுதோல்வியை அதிமுக சந்தித்தது.
எடப்பாடி பழனிசாமிக்கு எனக்கு அறிவுரை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை. கண்ணாடி முன் நின்று அவரை அவரே பார்த்துக்கொள்ள வேண்டும். 2019 தோல்வி, 2021 தோல்வி, 2024 தோல்வி எனத் தொடர் தோல்விகளை சந்தித்துக்கொண்டிருக்கிறார். ‘ஈபிஎஸ்ஸை ஈரோடு இடைத்தேர்தலில் நிற்கவேண்டாம் எனச் சொல்லுங்கள். இது என்னோட கோட்டை, என்னோட சொந்த ஊர்… பல ஆயிரம் வாக்குகள் பெற்று நான் வென்றுகாட்டுகிறேன்' என்று என்னிடம் சொன்னார். ஈரோட்டில் ஆயிரம் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறார். 2026 சட்டமன்றத்தேர்தலின்போதும் சட்டம், ஒழுங்கு இப்படித்தான் இருக்கப்போகிறது…. அப்போதும் புறக்கணிப்பாரா?
தமிழகத்தின் பொறுப்பான எதிர் கட்சித் தலைவராக அவருடைய செயல்பாடுகள் இல்லை. எடப்பாடிக்கு அடிமையாக இருப்பதற்கு இல்லை இங்கே பாஜக. தனியாக சேர் போட்டுக்கொண்டு நாலு பேரைவைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி பிரஸ்மீட் கொடுக்கலாம். ஆனால், அவர் சொல்வதைக் கேட்க அங்கே தொண்டர்கள் யாரும் இல்லை’’ என்று பேசியிருக்கிறார் அண்ணாமலை.
எடப்பாடியும், அண்ணாமலையும் நேருக்கு நேர் மோதுவதால் அதிமுக, பாஜக தொண்டர்கள் இனி காலத்துக்கும் கூட்டணி கிடையாதோ எனக் கலக்கத்தில் இருக்கிறார்கள்.