நாடாளுமன்றத்தில் காணாமல் போன ஜெய் ஶ்ரீ ராம் கோஷங்கள்… பாஜக எம்பிக்கள் பதவியேற்பில் நிகழ்ந்த மாற்றம்!
2024-ம் மக்களவை தேர்தல்முடிந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராகிருக்கும் நிலையில் நேற்றும் இன்றும் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றார்கள்.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளுக்கு பின் நடந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பின்போது பாஜக எம்பிக்கள் ‘’ஜெய் ஶ்ரீ ராம்’’ என முழங்கினார்கள். ஆனால் இந்த முறை பதவியேற்பின்போது ஜெய் ஶ்ரீராம் முழுக்க பாராளுமன்றத்தில் எதிரொலிக்கவில்லை.
பாஜக ஆட்சியின் மைல்கல்லாக, தன்னுடைய தனிப்பெரும் சாதனையாக நினைத்து அயோத்தியில் ராமர் கோயிலை கட்டி எழுப்பினார் பிரதமர் மோடி. ஆனால், 2024 தேர்தலில் அயோத்தி ராமர் கோயில் அமைந்திருக்கும் ஃபைசாபாத் தொகுதியிலேயே பாஜக தோல்வியடைந்தது. அதனாலோ என்னவோ ‘’ஜெய் ஶ்ரீ ராம்’’ முழக்கத்தை இந்தமுறை கைவிட்டுவிட்டார்கள் என சமூகவலைத்தளங்களில் பலரும் எழுதிவருகிறார்கள்.
பாஜகவின் முக்கிய எம்பி-க்கள் யாரும் இந்தமுறை பதவியேற்கும்போது எந்த கோஷத்தையும் எழுப்பாமல் இடைக்கால சபாநாயகருக்கு கைகொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார்கள். பெரும்பான்மையான எம்பிக்கள் 'பாரத் மாதா கி ஜே', 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என முழங்கினார்கள்.