மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

‘’ஆணவத்தில் சொல்லவில்லை… 2026 தேர்தலில் திமுகவுத்தான் வெற்றி'’ - பவளவிழாவில் மு.க.ஸ்டாலின்

"எதிர்வரும் தேர்தலிலும் நமக்குத்தான் வெற்றி. இதை ஆணவத்தில் சொல்லவில்லை. தொண்டர்கள் மீது இருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன்’’ என்று திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
Published on

திமுக முப்பெரும் விழா இன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், திமுக தலைவர்கள், அமைச்சர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். பல்வேறு விருதுகளை வழங்கி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.

‘’திமுக பவள விழா நடத்துவதை எனக்கு கிடைத்த வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன். திமுகவின் தேவை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு உள்ளது. திமுகவுக்கு தித்திக்கும் கொள்கை இருக்கிறது. கொள்கையை காக்கும் படையாக, தொண்டர்கள் இருக்கிறார்கள். தொண்டர்களின் வீரத்தால் துணிச்சல் பெற்ற தலைமை இருக்கிறது. நூற்றாண்டை நோக்கி முன்னேறுவோம். நம்முடைய இலக்கு 2026 தேர்தல். இதுவரைக்கும், இப்படி ஒரு வெற்றியை எந்தக் கட்சியும் பெற்றது இல்லை, என வரலாறு சொல்ல வேண்டும்.

தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றோம் என்பதை விட வென்றோம் என்றுதான் சொல்ல வேண்டும். அமெரிக்க தொழில் முதலீடுகள் மூலம் பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. அமெரிக்காவில் தமிழர்கள் எனக்கு அளித்த வரவேற்பு பிற மாநில மக்களும் சமூக வலைதளங்களில் பாராட்டும் அளவுக்கு உள்ளது. தமிழ்நாடும் திமுகவும் எனது இரு கண்கள்.

ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கம்பீரமாக இருப்பதற்கு திமுகவின் அமைப்பு முறையே காரணம். ஓர் இயக்கம் 75 ஆண்டுகள் நீடித்திருப்பது சாதாரண சாதனை அல்ல. தலைவன் தொண்டன் என்றில்லாமல் அண்ணன் தம்பியை போல் திமுக செயல்படுகிறது. என்னை தலைமிர்ந்து முழங்க வைத்த தீரர்கள் வாழும் திசையை நோக்கி வணங்குகிறேன். 

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் திமுக எண்ணற்ற சாதனைகளைச் செய்துள்ளது. ஒவ்வொரு தனிமனிதனையும் காப்பாற்றும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி என்று கேட்கக் கூட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் கிடைக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய திமுக முயற்சிக்கும். 

இதுவரை சந்தித்த தேர்தல்களைப் போலவே அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெறும். தொண்டர்கள் மீதுள்ள நம்பிக்கையில்தான் கூறுகிறேன்; யாரும் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது’’ என்று பேசினார் மு.க.ஸ்டாலின்

logo
News Tremor
newstremor.com