543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான முடிவுகளும் ஜூன் 4-ம் தேதி வெளியானது. தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே சூரத் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்டதால் தேர்தலுக்கு முன்பாகவே 1-0 லீடிங்கில் கணக்கைத் தொடங்கியது பாஜக.
240 எம்பிக்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. காங்கிரஸ் 99 எம்பிக்களைப் பெற்றிருக்க, ஒரு சுயேட்சை எம்பி வெற்றிக்குப்பிறகு காங்கிரஸில் இணைந்தன் மூலம் 100 எம்பிக்களைப் பெற்றிருக்கிறது. உத்திரபிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி 37 எம்பிக்களுடன் மூன்றாவது பெரிய கட்சி என்கிற அந்தஸ்தைப்பெற்றிருக்கிறது.
2019 தேர்தலில் 303 எம்பிக்களை வென்ற பாஜக, இந்தமுறை 63 எம்பிக்களை இழக்க, கடந்த முறை 52 எம்பிக்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் இந்தமுறை 99 எம்பிக்கள் என 47 எம்பிக்களை புதிதாக சேர்த்திருக்கிறது.
18-வது நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 543 எம்பிக்களில் 280 பேர் முதல்முறை எம்பிக்கள். இவர்களில் நான்கு பேர் 25 வயது இளைஞர்கள். மாறாக 262 பேர் ஏற்கெனவே எம்பிக்களாக இருந்தவர்கள். இதில் இரண்டு பேர் ஏழு முறை எம்பிக்களாக வென்றவர்கள்.
543 எம்பிக்களில் 52 சதவிகித எம்பிக்கள் 55-வயதுக்கு மேலானவர்கள். அதிகபட்சமாக 82 வயதில் ஒருவர் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 38 சதவிகித எம்பிக்கள் 40 - 55 வயதுக்கு உட்பட்டவர்கள்!
74 பெண் எம்பிக்கள் இந்தமுறை வெற்றிபெற்று பாராளுமன்றத்துக்குள் நுழைகிறார்கள். ஆனால், இது கடந்த 2019 தேர்தலைக் காட்டிலும் 4 எம்பிக்கள் குறைவு. வெறும் 14 சதவிகித பெண்களே இந்திய நாடாளுமன்றத்துக்குள் இடம்பிடித்திருக்கிறார்கள்.