கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் 10 லட்சம் அறிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு கடுமையான கண்டங்கள் எழுந்துவருகின்றன. நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா ஆகியோர் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிப்பை கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். சினிமா பிரபலங்கள், அரசியல் விமர்சகர்கள் எனப்பலருமே இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு சரியா, தவறா?!
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்குவதன் மூலம் வரி செலுத்துவோர் தங்கள் பணம் தகாத முறையில் பயன்படுத்தப்படுவதாக உணர்கிறார்கள். இது உண்மையும் கூட. ஆனால், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் முடிவு என்பது மனிதாபிமானம், பொது சுகாதாரம் மற்றும் அரசியல் சூழலின் கலவையான செயல்பாடாகத்தான் புரிந்துகொள்ளவேண்டுமே தவிர, வரிப்பணம் வீணாவதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
விபத்து அல்லது இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு, சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், அரசு நிதியுதவி வழங்குவது என்பது மனிதாபிமான அடிப்படையிலானது. ஒரு குடும்பத்தின் பொருளாதரத்துக்கு ஆணிவேராக இருப்பவர் மரணித்தால் அந்தக் குடும்பம் ஆதரிவின்றி தத்தெளிக்கும் என்பதற்காக அளிக்கப்படும் உதவி இது. இங்கே எதனால் மரணித்தார்கள் என்பதைவிடவும் எந்தச் சூழலில் அந்த மரணம் நிகழ்ந்தது என்பதுதான் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
இழப்பீட்டின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் கொந்தளிப்பை அப்போதைக்கு தணிக்கும் வியூகமும் இதில் இணைந்திருக்கிறது. ஆனாலும் இழப்பீடு வழங்குவதன் மூலம், சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றை அனுமதித்த முறையிலான தோல்விகளை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது என்றே அர்த்தம்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதனால் மரணித்தவர்களுக்கு பொது நிதியில் இருந்து இழப்பீடு வழங்கக்கூடாது என விமர்சனங்கள் எழுந்தாலும், பாதிக்கப்பட்ட மக்கள் தத்தளித்து, ஆதரவின்றி நிற்கும்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட அரசாங்கம் தனது குடிமக்களுக்கு ஆதரவளிக்க வேண்டியது தார்மீக கடமை மற்றும் பொறுப்பு. கைகட்டி வேடிக்கைப் பார்க்கமுடியாது. இந்திய சட்டமும் இதைத்தான் சொல்கிறது.
இழப்பீட்டை மறுப்பது என்பது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீது அரசுக்கு அனுதாபம் இல்லை, அந்த மக்களை அரசு புறக்கணிக்கிறது என்கிற பிரசாரமாக மாறலாம். இதனால் இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுமே கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டை வழங்கியிருக்கிறது.