மு.க.ஸ்டாலினுக்கு சான் பிரான்சிஸ்கோவில் உற்சாக வரவேற்பு… இந்திய தூதரகம் சிறப்பு அழைப்பு!
அமெரிக்கா சென்றிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சான் பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் தரையிறங்கினார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது!
‘MACHA SWAG DANCE’ என்கிற டிஷர்ட் அணிந்திருந்த குழுவினர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா இருவரையும் ஆட்டம், பாட்டத்தோடு வரவேற்றனர். ஸ்டாலின் பயணத்துக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய ஏற்கெனவே அமெரிக்கா சென்றிருந்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்பு நிகழ்வுகளைக் கண்காணித்தார்.
இன்று இரவு சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொள்ளும் ஸ்டாலினுக்கு நாளை மறுநாள்(31-08-2024) இந்திய தூதரகம் சார்பில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ‘’மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு, இந்தியத் தூதரக அதிகாரி டாக்டர் கே.ஸ்ரீகர் ரெட்டி அவர்கள் நடத்தும் சிறப்பு இந்திய புலம்பெயர்ந்தோர் நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிகழ்வு சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஃபெர்மான்ட்டில் உள்ள ஹார்ட்ஃபுல்னஸ் சென்டரில் நடைபெற இருக்கிறது!