''ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமற்றது'' - முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

''ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமற்றது'' - முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Published on

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற முழக்கம் பாஜக அரசின் நீண்டகால அரசியல் இலக்கு. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான நோக்கத்துடன் இந்த திட்டம் முன்மொழியப்பட்டது. சமீபத்தில் மத்திய அமைச்சரவை இந்த சட்டப்பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்திருப்பதால், வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் இதற்கான சட்டமசோதா முன்வைக்கப்பட இருக்கிறது. 

இந்தியாவின் தேர்தல் முறையை மாற்றி அமைக்கும் இந்த சட்டப்பரிந்துரைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. இந்தியாவின் பரந்துபட்ட தேர்தல் முறையின் சிக்கல்களைக் கவனத்தில் கொள்ளாததும், கூட்டாட்சியியலைச் சிதைப்பதுமாகும். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடப்பது, அந்தந்த மாநிலத்துக்குரிய பிரச்சனைகள், ஆட்சி முன்னுரிமைகள் உள்ளிட்ட காரணங்களால் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமற்றது'' என்று தெரிவுத்துள்ளார். 

மேலும், ''யதார்த்தத்துக்கு முரணாக அனைத்து மாநில அரசுகளின் ஆட்சிக்காலத்தையும் ஒரே வரிசையில் கொண்டு வருவது என்பது இயல்பாக நடக்கும் அரசு நிர்வாகத்துக்கு இடையூரை உருவாக்கும்'' என்று குறிப்பிட்டவர், ''இந்த முன்மொழிவு பாஜகவின் ஆணவத்தைத் திருப்திப்படுத்துவதற்கான நகர்வுதானே தவிர, இதனை ஒருபோதும் அவர்களால் நடைமுறைப்படுத்த முடியாது. இந்திய ஜனநாயகத்தை ஒற்றைக் கட்சியின் பேராசைக்கு ஏதுவாக வளைக்கமுடியாது'' என்று தெரிவித்தார்.

''ஒன்றிய அரசானது இத்தகைய திசைதிருப்பல் உத்திகளில் தனது ஆற்றலை வீணடிப்பதை விட்டுவிட்டு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களைச் சமமாக பகிர்ந்தளித்தல் ஆகிய முக்கியமான விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும்” என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com