மு.க.ஸ்டாலின் இன்றிரவு சான் ஃபிரான்சிஸ்கோ, சிகாகோ பயணம்… அமெரிக்காவில் 17 நாள் பயணம் ஏன்?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ, சிகாகோ நகரங்களுக்கு 17 நாள் பயணமாக இன்றிரவு துபாய் வழியாக அமெரிக்கா செல்கிறார். 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஜிடிபி 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என உயரவேண்டும் என திட்டம் வகுத்திருக்கிறது தமிழக அரசு. இதன் ஒரு அங்கமாகத்தான் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் அமைய இருக்கிறது என்கிறார்கள் அரசு அதிகாரிகள். இதற்கிடையே தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஏற்கெனவே அமெரிக்கா சென்று அங்கு முதலமைச்சரின் வருகைக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
நாளை சான் ஃபிரான்சிஸ்கோ செல்லும் தமிழக முதல்வர் அங்கே செப்டம்பர் 2-ம் தேதி வரை தங்கியிருப்பார். அதன்பிறகு சிகாகோ செல்லும் அவர் செப்டம்பர் 11-வரை அங்கே தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் எனச் சொல்லப்படுகிறது. சிகாகோவில் முழு உடல் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்களையும் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் சந்திக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள். மு.க.ஸ்டாலின் மீண்டும் செப்டம்பர் 12-ம் தேதி சென்னை திரும்புகிறார்.
செப்டம்பர் 7-ம் தேதி சிகாகோவில் ‘வணக்கம் அமெரிக்கா’ என்கிற மாநாட்டுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் பல்வேறு தொழிலதிபர்கள், சர்வதேச தமிழ் பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.