பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்

இந்து மத எதிர்ப்பு, பெளத்த கோயில் திறப்பு... ஆம்ஸ்ட்ராங் கொலையில் பா.இரஞ்சித் சொல்லும் சூழ்ச்சி?!

அண்ணன் திருமாவளவனுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். உங்களுக்கு எதிராக ஒரு நாளும் நாங்கள் இருக்க மாட்டோம்… உங்களுக்கு எதிராக நாங்கள் ஏன் இருக்க வேண்டும்? எங்களுடைய குரல் நீங்கள்… உங்களை ஒருபோதும் நாங்கள் விட்டுக் கொடுத்து விட மாட்டோம். - பா.இரஞ்சித்
Published on

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி நேற்று மாலை சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டலில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. இதில் தலித் கூட்டமைப்பினர், சமூக செயற்பாட்டாளர்கள், பல கட்சிகளின் பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்பட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. இதன்பிறகு பா.இரஞ்சித் தலைமையில் பொதுக்கூட்டமும் நடந்தது. இதில் பலரும் உரையாற்றினார்கள்.

தொல்.திருமாவளவன், மு.க.ஸ்டாலின்
தொல்.திருமாவளவன், மு.க.ஸ்டாலின்

இதற்கிடையே பேரணிக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் ''நம்மீது அவதூறு பரப்புவோர், கூலிக்கு வேலை செய்வோர் அழைக்கும் எந்த பேரணியிலும் நிகழ்ச்சிகளிலும் விசிக-வினர் கலந்து கொள்ளக்கூடாது’’ எனக் கூறியிருந்தார். பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த பேரணியையே திருமாவளவன் இப்படி மறைமுகமாகப் பேசியதாக விமர்சனங்கள் எழுந்தது.

இதற்கு பதில் அளிக்கும் வகையிலும், சமூக வலைதளங்களில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்தும், அதன் பின்னணியில் நடக்கும் நிகழ்வுகள் குறித்தும் பேசினார். பா.இரஞ்சித். அவரது பேச்சின் முக்கிய அம்சங்கள் மட்டும் இங்கே!

1.அண்ணன் திருமாவளவன்!

இது காசுக்காக கூடிய கூட்டமா? காசு கொடுத்து நம்மை யாரும் கூப்பிட்டார்களா? யாருக்காக கூடினோம்… ஆம்ஸ்ட்ராங் அண்ணனுக்காக கூடியிருக்கிறோம்.. காசு கொடுத்து நம்மை யாரும் கூப்பிடவே முடியாது. நாம் எது பேசினாலும் கதையை கட்டி விடுகிறார்கள். கலவரம் நடக்கும் என்று எழுதுகிறார்கள். அதனால் இந்தக் கூட்டதுக்கு போகவேண்டாம் என மறைமுகமாகச் சொல்கிறார்கள். அண்ணன் திருமாவளவனுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். உங்களுக்கு எதிராக ஒரு நாளும் நாங்கள் இருக்க மாட்டோம்… உங்களுக்கு எதிராக நாங்கள் ஏன் இருக்க வேண்டும்? எங்களுடைய குரல் நீங்கள்… உங்களை ஒருபோதும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

2. எது சமூக நீதி?!

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங்கை நல்லடக்கம் செய்ய ஒரு இடத்தை பெற்றுத்தர முடிந்ததா இந்த சமூக நீதி அரசால்? ஊருக்கு வெளியே புதைத்திருக்கிறோம். சென்னைக்குள் மணிமண்டபம் கட்ட இந்த அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.  

பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்

3. திமுகவை மட்டும் விமர்சிக்கவில்லை?

நாங்கள் திமுகவை மட்டும் விமர்சிக்கவில்லை. காங்கிரஸ் தொடங்கி பின் நீதி கட்சி அதைத்தொடர்ந்து திமுக, அதிமுக என இப்படி பல கட்சிகளுக்கு மாறி மாறி வாக்கு செலுத்தினோம். ஆனால் எந்த கட்சியும் எங்கள் சமூகத்தை கண்டுகொள்ளவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் ஒருபோதும் தலித்களின் குரலில் ஒளிந்திருக்கும் வலியையும் வேதனையையும் ஒருபோதும் உணர்ந்ததே இல்லை. சமூகத்தில் ஒரு தலித் தன் திறமையின் அடிப்படையில் மேலே வந்தால் கூட அவனை கோட்டாவில் வந்தவன் என்று விமர்சனம் செய்கின்ற அவலம் இந்த சமூகத்தில் இருக்கிறது.

4. ஆம்ஸ்ட்ராங் ரவுடியா?

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு வலைத்தளங்களில் அவரை ரவுடி என்று எழுதிய அயோக்கியர்கள் யார்? முதலில் பாஜக, பின் முற்போக்குவாதிகள் என அடையாளப்படுத்திக்கொள்கிற திமுக ஐடி விங். அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்டால், ரவுடி என்று சொல்வீர்களானால் நாங்களும் ரவுடிகள்தான்.

5. காவல்துறை உண்மையை கண்டுபிடிக்கவேண்டும்?!

காவல் துறை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அயோக்கியர்களை கண்டுபிடிக்கும் வரை ஓயமாட்டோம். ஒருவேளை காவல் துறையின் விசாரணையில் சந்தேகம் ஏற்பட்டால் அடுத்த கட்டத்துக்கு செல்லவும் தயங்க மாட்டோம்.

கூட்டத்தினர்
கூட்டத்தினர்

6. புத்த கோயிலை கட்டியதால் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டாரா?

ஆம்ஸ்ட்ராங் தீவிரமாக இந்து மதத்துக்கு எதிராகப் போராடியவர். பெளத்த மதமாற்றத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக உயர்த்தியவர். பெளத்த கோயிலைக்கட்டி முதன்முதலாக பெளத்தர்களாக பலரையும் மாற்றியவர். இந்த பின்னணியையும் கொண்டு போலீஸ் விசாரிக்கவேண்டும்.


7. ரிசர்வ் எம்பி, எம்எல்ஏக்களின் ஏன் குரல் கொடுக்கவில்லை!

தமிழகம் முழுதும் தலித் சமூகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றீர்கள். ஏன் ஒருவர் கூட ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. சென்னை மேயராக பிரியா இருப்பதற்கு காரணம் அவர் ஒரு தலித் என்பதுதான். ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக கயல்விழி செல்வராஜ் இருப்பதற்கு காரணம் அம்பேத்கர் ஏற்படுத்திக்கொடுத்த இட ஒதுக்கீடு தான். உங்களைத் தடுப்பது யார்? உங்கள் கட்சி தடுக்கிறதா? 

கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கும் மேலாகப் பேசிய இரஞ்சித்தின் பேச்சு சமூகவலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com