கருணாநிதி, காவல்துறை குறித்து சீமான் சர்ச்சை பேச்சு… கைது நடவடிக்கையா, மன்னிப்பா?!
ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், இந்த ஆண்டு மட்டும் இதுவரை 595 கொலைகள் நடந்துள்ளதாகவும், தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும் குறிப்பிட்டார். குற்ற சம்பவங்களுக்கு கடும் தண்டனைகள் இல்லாததால் குற்றங்கள் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் இருப்பது கேவலம் என்று பேசிய சீமான், காவல்துறையில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகள் குறித்து தகாத வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்தார். சாட்டை துரைமுருகனை கைது செய்து அவரது செல்போனில் இருந்த ஆடியோ உரையாடல்களை வெளியிட்டதற்காக போலீஸ் அதிகாரியை விமர்சித்தார் சீமான்.
இது குறித்து திருச்சி எஸ்.பி.வருண்குமார், ‘’நான் ஏற்கனவே எனது வழக்கறிஞர் மூலம் அவருக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வேன். ஜனநாயகம் மற்றும் நீதிமன்றம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. கொச்சையான பொய்களை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். 7 வார காலத்திற்குள் பொது இடத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் சீமான் வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க நேரிடும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே கருணாநிதியை தனிப்பட்ட முறையில் விமர்சித்து பாடிய சீமான் மீது தமிழக அரசின் சார்பில் வழக்குத்தொடரப்படும் எனத்தெரிகிறது.