‘’50 ஆயிரம் கிடைக்கும்னு டாஸ்மாக்ல குடிச்சிட்டு ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிடுறாங்க’’ - சீமான் விமர்சனம்!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்த நிலையில், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருக்கிறார்.
‘’தமிழ்நாடு அரசு விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் பத்து லட்சம் நிவாரணம் அறிவித்தது கள்ளச்சாராயம் அருந்துபவர்களை ஊக்குவிப்பது போல் உள்ளது’’ என்று சொன்ன சீமான் ‘’முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிவாரணத்தொகை ஆறுதல் அளிக்கவில்லை மாறாக ஆத்திரம் அளிக்கிறது’’ என்றார்.
‘’இந்த நாட்டில் அதிகபட்சம் எதற்கு நிவாரணம் கொடுக்கப்பட்டது?’’ என்ற கேள்வியை எழுப்பிய சீமான், ‘’கள்ளச்சாராயம் குடித்து இறந்ததற்காக! இது எவ்வளவு அசிங்கம். இந்த நாட்டுக்கும் இந்த நாட்டை ஆண்டு கொண்டு இருப்பவர்களுக்கும். அரசு நிவாரணம் அறிவித்ததும் டாஸ்மாக்கில் மது அருந்தியவர்கள் கூட வயிற்று வலி என்று பொய் சொல்லி, கள்ளச்சாராயம் அருந்தியதாக மருத்துவமனையில் படுத்துக்கொள்கிறார்கள்.
உழைப்பவர்களை ஊக்கவிக்கவோ, விவசாயிகளை ஊக்குவிக்கவோ, மீனவர்களை ஊக்குவிக்கவோ, நிவாரணம் அளிக்காத அரசு கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு நிவாரணம் அளித்தது அவர்கள் செய்த தவறை மறைப்பதற்கு கொடுக்கப்படும் லஞ்சம்…. இது வெட்கக்கேடானது'’ என்று பேட்டியளித்துள்ளார் சீமான்.