செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது… மீண்டும் அமைச்சராக எந்த தடையும் இல்லை!
தமிழக அரசின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட பண மோசடி வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 26) முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை (ED) கடந்த ஆண்டு செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சராக இருந்தபோது கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, சிறையில் அடைக்கப்பட்டார். 15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு, இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
உச்சநீதிமன்றத்தின் நிபந்தனைகள்!
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதுடன், சில முக்கிய நிபந்தனைகளையும் உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. அவற்றின் அடிப்படையில், செந்தில் பாலாஜி ஒவ்வொரு திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். மேலும், அவர் சாட்சிகளை கலைக்க கூடாது மற்றும் விசாரணைகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும், விசாரணையை இழுத்தடிக்க முயற்சிகள் மேற்கொள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
அமைச்சராகப் பதவியேற்கலாமா?!
செந்தில் பாலாஜி மீண்டும் தமிழக அமைச்சராக பதவியேற்க எந்த தடையையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞராக ஆஜரான என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.
அக்டோபர் முதல் வாரத்தில் அமைச்சரவை மாற்றமும், உதயநிதி ஸ்டாலினின் துணை முதலமைச்சர் பதவியேற்பும் நிகழ இருக்கும் நிலையில் செந்தில் பாலாஜி இந்த அமைச்சரவை மாற்றத்தின்போது மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.