அக்டோபர் முதல் வாரம் அமைச்சரவை மாற்றம்... ஏமாற்றம் இல்லாமல் துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்!
செந்தில் பாலாஜி ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தவுடன், தமிழக அரசின் அமைச்சரவை மாற்றம் நடைபெற இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான திட்டத்தை தீட்டி மூத்த அமைச்சர்களிடமும் ஒப்புதல் வாங்கியிருக்கிறார்.செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாகும் நிலையில் அக்டோபர் முதல் வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவை மாற்றத்தின் முக்கிய அம்சமாக, ஸ்டாலினின் மகனும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார். இது குறித்து ஊடகங்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், "மாற்றம் இருக்கும்… ஏமாற்றம் இருக்காது" என ஏற்கெனவே பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றம், தமிழக அரசின் எதிர்கால செயல்பாடுகளில் மிக முக்கிய பங்கு வகிக்கப்போகிறது என்பதால் இதுகுறித்த செய்திகள் அரசு அதிகாரிகள் வட்டத்தில் மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. உதயநிதி ஸ்டாலினின் துணை முதல்வர் பதவியோடு புதிதாக இரண்டு அமைச்சர்களும் பதவியேற்க இருக்கிறார்கள். இதற்காக மூத்த அமைச்சர்கள் இருவர் பதவி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் பொறுப்பில் நியமிக்கப்பட இருப்பது தமிழக அரசியலிலும், திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் வளர்ச்சியிலும் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. காந்தி ஜெயந்திக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கலாம்!