விஜய் தவெக தொண்டர்களுக்கு முதல் கடிதம் : ‘’வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம்!’’
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது முதல் கடிதத்தை தனது அன்பு தொண்டர்களுக்கு எழுதியுள்ளார். இந்தக் கடிதம், அவரது தொண்டர்கள் உட்பட, தமிழக மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பனையூரில் அமைந்துள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைமையகத்தில் இருந்து விஜய் எழுதியிருக்கும் இந்தக் கடிதம், அவரது தொண்டர்கள் மத்தியில் ஒரு புதிய எழுச்சியைக் கொண்டு வந்திருக்கிறது. "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே" என தொடங்கும் கடிதம், விஜய்யின் மாநாடு குறித்த தெளிவை வெளிப்படுத்துகிறது.
தமிழக மக்களுக்காக உணர்வு கொண்ட கட்சி!
விஜய், அவரது கட்சி தொண்டர்களுக்கு ‘’அரசியல் என்பது விளையாட்டு அல்ல, நாட்டின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு கடமை’’ என்று இந்தக் கடிதத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். "பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான குடிமகனைத்தான் நாடு மதிக்கும்" எனத் தன்னுடைய தொண்டர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்.
அரசியல் களப்பணிகள் தொடங்கும் இதே வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டதாக அவர் அறிவித்திருக்கிறார். "நம் கழகத்தின் மாநில மாநாடு, நம் கொள்கைத் திருவிழா" என்று கூறி, மாநாட்டின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டிருக்கிறார் விஜய்.
வெற்றி மாநாடு?!
இந்த மாநாடு, பொதுவான ஒரு அரசியல் கூட்டம் அல்ல, அது வெற்றியின் களத்தில் ஒரு மிகப்பெரும் கூட்டம் என்றும், அதில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். “நம் கழகம் சாதாரண இயக்கமன்று, இது ஆற்றல் மிக்க பெரும்படை. இளஞ்சிங்கப் படை. சிங்கப் பெண்கள் படை" என்று விஜய் தொண்டர்களை உற்சாகம் நிரம்பும் வார்த்தைகளால் குறிப்பிட்டிருக்கிறார்.
மாநாட்டுக்கான குழுவினர் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும், அந்தக் குழுவினர் பொறுப்புடன் செயல்படுவார்கள் என்றும் இந்தக் கடிதத்தில் அறிவித்திருக்கிறார் விஜய்.
வெற்றிச்சாலையில் சந்திப்போம்!
"மாநாட்டைப் பற்றி கேள்வி எழுப்புகிற சிலர் இருக்கலாம், ஆனால் நம்முடைய வெற்றியை அவர்கள் புரிந்து கொள்வார்கள். வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம்" என அவர் இந்தக் கடிதத்தை நிறைவு செய்திருக்கிறார்.
இந்தக் கடிதம், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களுக்கு புதிய தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்திருக்கிறது. விஜய்யின் அரசியல் பயணம் தொடங்கிவிட்டதற்கான அறிவிப்பாக இந்தக் கடிதம் இருக்கிறது.