தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்… கொண்டாடிக் கொளுத்த தயாராகும் விஜய்!
சினிமாவில் ரசிகர் படையிலும், வியாபார வெற்றியிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இணையாக உயர்ந்திருக்கும் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்கிற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'’ என்பதை அடிப்படையாக கொண்டு தொடங்கப்பட்டிருக்கும் இக்கட்சியின் கொடி மற்றும் கொடிப்பாடல் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில் விஜய் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு கிட்டத்தட்ட போலீஸ் அனுமதியும் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் விஜய் கட்சியின் மாநாட்டை தள்ளிவைக்க ஆலோசனை நடத்தி வருவதாக அக்கட்சிக்கு நெருக்கமானவர்கள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்த சந்தோஷச் செய்தியை நாளை வீடியோ மூலம் காலை 11 மணிக்கு அறிவிக்க இருக்கிறார் நடிகர் விஜய். இந்த நாளை தமிழகம் முழுக்க உள்ள ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ‘புஸ்ஸி’ ஆனந்த் மூலம் உத்தரவு பறந்திருக்கிறது.