சென்னை லயோலா கல்லூரியில் பிகாம் படித்தவர் உதயநிதி ஸ்டாலின். கல்லூரி படிப்பை முடித்த சில ஆண்டுகளிலேயே நுங்கம்பாக்கத்தில் ஸ்னோபவுலிங் சென்டரைத் தொடங்கி நடத்திவந்தார். இதுதான் உதயநிதி நடத்திய முதல் தொழில்!
கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்த கிருத்திகாவை 2002-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் உதயநிதி. இவருக்கு இன்பநிதி என்கிற மகனும், தன்மயா என்கிற மகளும் உள்ளனர்.
2008-ம் ஆண்டு முதன்முதலாக தயாரிப்பாளராக சினிமாவுக்குள் அடியெடுத்துவைத்தார் உதயநிதி. அப்போது கலைஞர் முதல்வராக திமுக ஆட்சியில் இருந்தது. விஜய் நடிக்க ‘குருவி' எனும் படத்தை தயாரித்தார். இந்தப் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
சூர்யா நடிப்பில் தான் தயாரித்த ‘ஆதவன்' படத்தின் இறுதிகாட்சியில் வேலைக்காரனாக முதன்முதலாக நடிகராக அறிமுகமானார் உதயநிதி. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தவர், ‘மாமன்னன்' வரை 15 படங்கள் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
2019-ம் ஆண்டு திமுகவின் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் 2021 சட்டமன்றத்தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ-வாக வென்றார்.
திமுக சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி பொறுப்பேற்ற ஓர் ஆண்டுக்குப் பிறகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். இரண்டு ஆண்டுகால அமைச்சர் அனுபவத்தில் தற்போது துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.