ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனும் திருமாவளவனின் குரல்... அரசியல் எழுச்சியா, திமுகவுக்கான எச்சரிக்கையா?

ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனும் திருமாவளவனின் குரல்... அரசியல் எழுச்சியா, திமுகவுக்கான எச்சரிக்கையா?

ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் பேசிய காணொலியை திருமாவளவனின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் வெளியிட்ட ஒரு சில நிமிடங்களில் டெலீட் செய்யப்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Published on

கடந்த செப்டம்பர் 12-ம் தேதி மறைமலைநகரில் நடந்த சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் மண்டல அளவிலான செயற்குழு கூட்டத்தில் திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பற்றி பேசிய காணொலியை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு, பின் ஒரு சில நிமிடங்களில் நீக்கியது பேசு பொருளாகியிருக்கிறது. "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு மற்றும் கடைசி மனிதனுக்கும் சனநாயகம், எளிய மனிதனுக்கும் அதிகாரம்" என குறிப்பிட்டு பேசியிருந்தார்.  

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வெளிநாட்டு பயணத்தை முடித்து நேற்று சென்னைக்கு திரும்பிய நாளில் திருமாவளவன் இத்தகைய பதிவை பதிவிட்டது திமுக விசிக கூட்டணிக்கிடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கியது.

திருமாவளவன் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கேட்பது புதிதல்ல. தனது 90-களின் அரசியலில் இருந்தே எளிய மக்களுக்கு அதிகாரம் பெற்று தர வேண்டும் என்பதுதான் அவரின் கொள்கையாக இருந்தது வருகிறது. அதே முழக்கம் இன்றும் தொடர்ந்து இருப்பது திருமாவளவன் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணிக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது.

கடந்த ஒரு சில நாட்களாகவே தமிழக அரசியலில் திருமாவளவன் பேசும் பேச்சுகள் அனைத்துமே பேசு பொருளாக இருந்து வருகிறார். அக்டோபர் 2-ல் கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு முதல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பேச்சு வரை திருமாவளவனின் அரசியல் நோக்கம் என்னவாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கோணங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தரப்பிலிருந்து திருமாவளவனின் எந்த ஒரு பேச்சுக்கும் நேரடி எதிர்ப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பல கோடி விளிம்பு நிலை மக்கள் அதிகாரமற்று கிடக்கிறார்கள். அவர்களின் ஒட்டுமொத்த குரலாக அரசியல் களத்தில் நிற்பவர் தான் திருமாவளவன். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு சாதி கட்சி என்று பலரால் சாடப்படாலும், அந்த வட்டத்துக்குள் அடங்காத திருமாவளவனும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இன்று மாநிலத்தின் ஒரு முக்கிய கட்சியாக வளர்ந்து இருக்கிறது.

இதுவரையில் கூட்டணி இல்லாமல் தனது ஓட்டு வங்கியை நிரூபிக்காத விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலத்தின் ஆளுங்கட்சியை தீர்மானிக்கக் கூடிய அளவுக்கு வளர்ந்து இருக்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் திருமாவளவனும் அவரது அரசியல் நுணுக்கமும்தான். ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு தலித் முதலமைச்சராக முடியாது என்று திருமாவளவன் பேசியிருந்தது விவாதங்களை கிளப்பியது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை முழங்கி இருக்கிறார் என்றே என்னத்தோன்றுகிறது. 

திருமாவளவனின் இந்த கோரிக்கைக்கு திமுக செவி சாய்க்குமா!

திமுக விசிக கூட்டணி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பையும் நம்பிக்கையும் கொண்ட கூட்டணி. விசிக திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் சமூகப் பிரச்சனைகளுக்கு ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ செய்யத் தயங்கியது இல்லை. அதுபோல் எந்த சூழ்நிலையிலும் திமுக விடுதலை சிறுத்தைகளை கண்டித்ததோ எதிர்த்ததோ இல்லை. ஆனால் தற்போது நிலவும் இந்தச் சூழலுக்கு திமுக கட்டாயமாக பதில் சொல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. 

2026 தேர்தலில் திருமாவளவனின் ஆதரவும் விடுதலை சிறுத்தைகளின் வாக்குகளும் திமுகவுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை முதல்வர் ஸ்டாலின் நன்கு அறிவார். ஒரு பக்கம் விஜய்யின் அரசியல் வருகை மற்றொரு பக்கம் அதிமுக, பாமக, நாம் தமிழர், பாஜக போன்ற எதிர்க்கட்சிகள்.. இவர்களை எல்லாம் சமாளிக்க வேண்டும் என்றால் திருமாவளவன் என்கிற தலைவனும், தலித் வாக்குகளும் திமுகவுக்கு தேவைப்படுகிறது என்பதுதான் உண்மை. அதை கருத்தில்கொண்டு விசிக-வை திமுக எளிதில் விட்டுக் கொடுத்துவிடாது. முடிந்த அளவில் விடுதலை சிறுத்தைகளை தக்க வைத்துக் கொள்ளத்தான் பார்க்கும். ஆனால் அதற்கு இடம் கொடுப்பாரா திருமாவளவன்? எந்த காலத்திலும் ஆட்சி அதிகாரத்திலும் எவருக்கும் பங்கு அளிக்காத திமுக விடுதலை சிறுத்தைகளுக்கு மட்டும் எப்படி பங்கு அளிக்கும்?

திமுக, விசிக கூட்டணி தொடருமா... அப்படியே தொடர்ந்தாலும் திருமாவளவனின் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் நீடிக்குமா.. அதற்கு திமுக தான் வழி வகுக்குமா என்று பார்ப்பதற்கு இன்னும் 15 மாதங்களே உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com