கூட்டணி சேரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு - விஜய் அறிவிப்பின் பின்னணி என்ன?
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ‘வெற்றி கொள்கைக் திருவிழா’ என்ற பெயரில் நேற்று முன்தினம் மாலை பிரமாண்டமாக நடந்துமுடிந்தது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து சாரை சாரையாக ஏராளமானோர் மாநாட்டில் பங்கேற்றனர்.
கூட்டத்தின் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதையில் நடந்து சென்ற விஜய் தொண்டர்கள் வீசிய கட்சி துண்டை அணிந்து கொண்டார். பின் மேடையிள் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர், காமராஜர், பெரியார், ரெட்டை மலை சீனிவாசன், கக்கன், திருப்பூர் குமரன், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், வேலு நாச்சியார், தியாகி அஞ்சலை அம்மாளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைதொடர்ந்து ரிமோட் மூலம் கட்சிக் கொடியை ஏற்றி உரையாற்றினார். விஜய்யுடன் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கொள்கை பரப்பு செயலாளர் தாகிரா, தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி ஆகியோர் மேடையை பகிர்ந்துக்கொண்டனர்.
மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பிரிவினைவாதம் மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம் என்று கர்ஜித்தார். அதைத்தொடர்ந்து தவெக கொள்கைகளை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் இடம்பெரும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்று பேசி கூட்டணி கதவுகளையும் திறந்தார்.
கொள்கைகளை விளக்கி விஜய் முதல் அரசியல் வழிகாட்டியாக தந்தை பெரியாரை குறிப்பிட்டார். ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் கையில் எடுக்கப் போவதில்லை என்றார். அடுத்ததாக காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை கொள்கை தலைவர்கள் என குறிப்பிட்டு பேசினார்.
தொடர்ந்து பேசிய விஜய் மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று கூறி ஏமாற்றுகிறார்கள் என திமுகவை நேரடியாக தாக்கினார். மேலும் மதசார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி செயல்பட உள்ளோம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் அரசியல் குறிக்கோள் என்றார். மேலும் என்னை ‘கூத்தாடி’ என்று கூப்பாடு போடுவார்கள். ஆனால் கூத்தாடிகள் தான் மக்களுக்கு அரசியல், அறிவியல், போன்றவற்றை கொண்டுசேர்ப்பார்கள் என்று பேசியவர் சினிமாவால் தான் திமுக மக்களிடம் சென்றடைந்தது என்று சுட்டிக்காட்டினார். அதுமட்டுமின்றி தனது சினிமா உச்சத்தை உதறிவிட்டு மக்களுக்கு பணியாற்ற வந்துள்ளேன் என்று உணர்ச்சிப்பொங்க பேசினார்.
இறுதியாக, மக்களோடு மக்களாக நாம் களத்தில் இருக்கப் போகிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நம்மை தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற செய்வார்கள். மக்கள் ஒற்றை விரலில் அழுத்தும் வாக்குகள் நம் எதிரிகள் மீது ஜனநாயக ரீதியாக அணுகுண்டாக விழும்.. நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்று தனது உரையை நிறைவு செய்தார் விஜய்.
மாநாட்டில் விஜய் அறிவித்த மூன்று முக்கிய செயல்திட்டங்கள் :
1. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது.
2. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்களுக்கு சமமான இடஒதுக்கீட்டை பெற்றுதருவது.
3. கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு அளிப்பது.
கொள்கை விளக்க மாநாட்டின்போது தனது கட்சி கூட்டணி கதவுகளை திறந்துவைத்திருப்பதாக அறிவித்திருப்பதோடு, மற்ற கட்சிகளை கூட்டணிக்கு வரத்தூண்டுவதற்காக ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என அறிவித்திருக்கிறார் விஜய். ஆனால், விஜய்யின் இந்த தூண்டிலில் நாம் தமிழர், விசிக போன்ற கட்சிகள் சிக்குமா என்பது சந்தேகம்தான்.