Live Updates : விஜய் கட்சி கொடி அறிமுகம்... சீமான் வாழ்த்து!
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தீவிர அரசியலில் ஈடுபடுவதாகவும், தமிழக வெற்றிக்கழகம் என்கிற பெயரில் கட்சி ஆரம்பித்திருப்பதாகவும் அறிவித்தார். இந்நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்று தனது கட்சியின் கொடியையும், கட்சிப் பாடலையும் மக்களுக்கு அறிமுகம் செய்கிறார் விஜய்.
விஜய் தனது கட்சிக் கொடியை இன்று காலை 9.15 மணிக்கு பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் ஏற்றிவைக்கிறார். கூடவே கொடிப்பாடலையும் வெளியிடுகிறார் விஜய்!
விஜய்க்கு சீமான் வாழ்த்து!
''தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும், என் அன்புத்தம்பி தளபதி விஜய் அவர்கள் இலட்சிய உறுதிகொண்டு, தமிழக அரசியலில் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்'' என அறிக்கை வெளியிட்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்!
வெளியானது தவெக கட்சியின் உறுதிமொழி!
''சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராக கடமை ஆற்றுவேன்'' என ஒருபக்க உறுதிமொழி தயாராக இருக்கிறது!
சிவப்பு மஞ்சளுடன் வாகை மலர்!
விஜய்யின் கொடியில் சிவப்பு மஞ்சள் வண்ணத்துடன் வாகை மலரும் இடம்பெற இருக்கிறது!
விஜய்யின் உறுதிமொழி!
தற்போது விஜய் உறுதிமொழியை வாசிக்க தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துவருகிறார்கள்!
போர் யானைகளின் நடுவே வாகை மலர்!
மேலும் கீழும் சிகப்பு, நடுவே மஞ்சள்... மஞ்சளில் இரண்டு பக்கமும் போர் யானை நடுவே வாகை மலருடன் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கொடி அமைக்கப்பட்டுள்ளது!
தமிழன் கொடி பறக்குது... விஜயக் கொடி பறக்குது!
தமிழன் கொடி பறக்கது... விஜயக் கொடி பறக்குது எனத்தொடங்கும் பாடலை கட்சிப் பாடலாக வெளியிட்டிருக்கிறார்கள்.