விஜய்
விஜய்

விஜய் கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம்… மாநாடு நடத்த போலீஸ் அனுமதி… டபுள் கொண்டாட்டத்தில் தவெக!

''நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்'' விஜய்.
Published on

GOAT திரைப்படம் வெளியான கையோடு அரசியல் பணிகளில் முழுமையாக இறங்கிவிட்டார் நடிகர் விஜய். இந்த மாதம் 23-ம் தேதி தமிழக வெற்றிக்கழகத்துக்கான மாநாடு வேலைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், போலீஸ் அனுமதி மற்றும் பல்வேறு காரணங்களால் மாநாடு திட்டமிட்டபடி நடக்குமா என்பது கேள்வியாகவே இருந்தது. 

இந்நிலையில் விஜய் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்.

தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம்.வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்! வாகை சூடுவோம்!’’ என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் விஜய்.

விஜய் அறிக்கை
விஜய் அறிக்கை

எனினும் விஜய் கட்சியின் தொண்டர்களும், ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்த மாநாடு குறித்த அதிகாரப்பூர்வத் தகவலை அவர் சொல்லவில்லை. இதற்கிடையே தற்போது 21 நிபந்தனைகளுடன் விஜய்யின் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி அளித்துள்ளது. 50 ஆயிரம் பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள முடியும் என போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் திட்டமிட்டபடி விஜய்யின் மாநாடு செப்டம்பர் 23-ம் தேதி நடக்கும் என்றே தெரிகிறது!

விஜய்யின் அரசியல் பயணம் வாகை சூடுமா?!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com