விஜய்யின் விக்கிரவாண்டி மாநாடு தள்ளிப்போகிறதா... போலீஸ் அனுமதி கிடைத்தும் ஒத்திவைப்பு ஏன்?
விக்கிரவாண்டி, வி.சாலை எனும் இடத்தில் உள்ள 85 ஏக்கர் நிலத்தில் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளரும், விஜய்யின் ரசிகர் மன்றத் தலைவருமான புஸ்ஸி ஆனந்த் காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தார்.
இதற்கு காவல்துறை சார்பில் எவ்வளவு பேர் வருவார்கள், அவர்களில் எத்தனைப் பேர் பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி உண்டா, உணவு எப்படி பரிமாறப்படும் என பல கேள்விகள் எழுப்பி விளக்கம் கேட்டிருந்தனர். இந்த கேள்விகளுக்கு நேற்று முன்தினம் புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை 50 ஆயிரம் பேர் கலந்துகொள்ளலாம், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என காவல்துறை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளிடம் தகவல் சொல்லியிருந்த நிலையில், விக்கிரவாண்டி மாநாடு தள்ளிப்போவதாக விஜய் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. போலீஸ் அனுமதி தர சம்மதித்தும் ஏன் மாநாட்டை தள்ளிவைக்கவேண்டும் என குழப்பத்தில் இருக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.
விக்கிரவாண்டி மாநாடு தள்ளிப்போவதற்கான காரணம் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில், விஜய் சில தனிப்பட்ட காரணங்களுக்காக மாநாட்டை தள்ளிவைக்கலாம் எனச் சொன்னதாக உறுதிப்படுத்தமுடியாத முதல் தகவல்கள் வருகின்றன. ஆனால் கட்சியின் மூத்த நிர்வாகிகளோ ''அரசியல் சூழல் தற்போது சரியாக இல்லை... அவசரப்பட வேண்டாம். கொஞ்சம் தள்ளிப்போடலாம்'' என விஜய் சொன்னதாக சில கட்சி நிர்வாகிகள் சொல்கிறார்கள்.