சுயேட்சை எம்பிக்களாக வெற்றிபெற்றிருக்கும் 7 எம்பிக்களுமே மிகவும் சுவாரஸ்யமான பின்னணியையும், அனுபவத்தையும் கொண்டவர்கள். இந்திரா காந்தியின் மெய்ப்பாளராக இருந்து அவரை சுட்டுக்கொன்றவர்களில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன் முதல், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஓர் ஆண்டாக சிறையில் இருக்கும் அம்ரித்பால் சிங் வரை வெற்றிபெற்றவர்கள் மூலம் மக்கள் சொல்லவருவது என்ன?!
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஃபரித்கோட் ரிசர்வ் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார் சரப்ஜித் சிங் கல்சா. 45 வயதான இவர் இந்திராகாந்தியின் மெய்ப்பாதுகாவலராக இருந்து அவரைச் சுட்டுக்கொன்றவர்களில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன். இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது இவருக்கு வயது 5. சரப்ஜித் சிங் தேர்தல்களில் போட்டியிடுவது இது முதல்முறை அல்ல. கடந்த 2004, 2009, 2014 எனத் தொடர்ந்து மூன்று தேர்தல்களிலும் தொகுதியில் போட்டியிட்ட இவரால் வெற்றிபெறமுடியவில்லை. 2007 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் சரப்ஜித். ஆனால், தோல்வியைக் கண்டு துவளாமல் இந்தமுறை Faridkot ரிசர்வ் தொகுதியில் போட்டியிட்டு, ஆம் ஆத்மி வேட்பாளரும், நடிகருமான கரம்ஜித் சிங் அன்மோலைவிட 70,053 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். 2004 தேர்தலில் 1 லட்சம் வாக்குகளே வாங்கி தோல்வியடைந்திருந்த சரப்ஜித் சிங் கல்சா இந்தமுறை 2.98 லட்சம் வாக்குகள் வாங்கி வெற்றிபெற்றிருக்கிறார்.
காலிஸ்தான் தீவிரவாதி எனச்சொல்லப்பட்டு அசாம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 31 வயதான அம்ரித்பால் சிங் பஞ்சாப் மாநிலம் Khadoor Sahib தொகுதியில் கிட்டத்தட்ட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றிபெற்றிருக்கிறார். பஞ்சாப் மாநிலத்திலேயே அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றிபெற்றிருப்பவர் அம்ரித்பால் சிங்தான். சரப்ஜித் சிங், அம்ரித்பால் சிங் இருவருமே இந்திய அரசியலைமைப்பின் மீது நம்பிக்கையற்றவர்கள். காலிஸ்தான் இயக்கம் எனச்சொல்லப்படும் பிரிவினைவாத இயக்கத்தை இருவருமே ஆதிரிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ் 1991 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து தொடர்ந்து பல தேர்தல்களில் போட்டியிட்டு எம்பியானவர். 56 வயதான பப்பு யாதவ் வெற்றிபெறும் ஆறாவது நாடாளுமன்றத் தேர்தல். லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் முதல் பல்வேறு கட்சிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் இந்தமுறை சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார். கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் பப்பு யாதவ். 2024 தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட பப்பு யாதவ் Purnia தொகுதியில் போட்டியிடும் வாய்ப்புக்காக காத்திருந்தார். ஆனால் காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி உடன்படிக்கையின்படி Purnia தொகுதி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கப்பட, காங்கிரஸில் இருந்து விலகி தனித்து களமிறங்கி வெற்றிபெற்றுவிட்டார் பப்பு யாதவ்.
சிறையில் இருந்தபடியே மட்டுமல்ல முன்னாள் ஜம்மூ காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவையே தோற்கடித்து வெற்றிபெற்றிருக்கிறார் 58 வயதான அப்துல் ரஷீத் ஷேக் எனும் இன்ஜீனியர் ஷேக். முன்னாள் இரண்டு முறை எம்எல்ஏ-வான இவர் சட்டசபை தேர்தல்களிலும் சுயேட்சையாக நின்றே வெற்றிபெற்றவர். இந்தமுறை பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட அப்துல் ரஷீத் ஷேக், ஃபரூக் அப்துல்லாவைவிட 2,04,142 வாக்குகள் அதிகம்பெற்று மிகப்பெரிய வெற்றிபெற்றிருக்கிறார். தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்த குற்றச்சாட்டில் 2019-ல் இருந்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் இன்ஜினீயர் ஷேக். சிறையில் இருந்தபடியே மிகப்பெரிய வெற்றிபெற்று மக்களுக்கு தன்மேல் இருக்கும் செல்வாக்கை நிரூபித்திருக்கிறார் ஷேக் ரஷீத்.
டாமன் & டையூ யூனியன் பிரதேசத்தின் டாமன் டையூ தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார் 47 வயதான உமேஷ்பாய் பாபுபாய் பட்டேல். சமூக சேவகரான உமேஷ்பாய் மூன்று முறை டாமன் &டையூ தொகுதியின் எம்பியான பிஜேபியின் லாலுபாய் பாபுபாய் பட்டேலைவிட 6 ஆயிரம் வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றிருக்கிறார்.
43 வயதான விஷால் பட்டேல் முன்னாள் மகாராஷ்டிரா முதல்வரான வசந்த்ராவ் பாட்டிலின் பேரன். மகராஷ்டிவிராவின் சாங்கிலி தொகுதியில் சுயேட்சையாக நின்றுவெற்றிபெற்ற விஷால் பாட்டில், வெற்றிபெற்றதும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து தன்னை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார். இதே சாங்கிலி தொகுதியில்தான் இவரது தந்தையும் எம்பியாக இருந்தார். சாங்கிலி தொகுதி கூட்டணி உடன்படிக்கையில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா பிரிவுக்கு ஒதுக்கப்பட்டதால் தனித்துப்போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார் விஷால் பாட்டில்.
லடாக் யூனியன் பிரதேசத்தின் லடாக் தொகுதியில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார் முகமது ஹனீஃபா. மூன்று பேர் மட்டுமே இத்தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. 55 வயதான ஹனீஃபா. ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளராக இருந்தவர் முகமது ஹனீஃபா. காங்கிரஸ் கட்சி வேட்பாளரைவிட 27 ஆயிரம் வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றிருக்கிறார் முகமது ஹனீஃபா.