ஆதவ் அர்ஜுனா, மனைவி டெய்ஸி, மாமனார் மார்ட்டின்
ஆதவ் அர்ஜுனா, மனைவி டெய்ஸி, மாமனார் மார்ட்டின்

திருமாவளவனின் வலது கரமா, திமுக-வை வளைக்கும் கரமா… யார் இந்த ஆதவ் அர்ஜுனா?!

ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் தலித் சமூகத்தைச் சாராதவர் என்பது குறிப்பிடத்தக்கது. விசிக பொதுத்தொகுதிகளில் போட்டியிடவேண்டும் என்பது ஆதவ் அர்ஜுனாவின் முக்கிய அரசியல் ஆலோசனை.
Published on

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாதான் இப்போது தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாபிக். விடுதலை சிறுத்தைகள் இல்லாமல் திமுக-வால் தேர்தலில் வெற்றிபெறமுடியாது, சினிமாவில் இருந்து இப்போது நடிக்கவந்தவர் துணை முதலமைச்சருக்குத் தகுதிபெறும்போது, 40 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் திருமா அதிகாரப்பகிர்வு குறித்து பேசக்கூடாதா என்கிற இவரது பேட்டிகள் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகின்றன. யார் இவர், இவரின் பின்னணி என்ன?!

யார் இவர்?

ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பெரும்பொறுப்பில் இருக்கும் தலித் சமூகத்தைச் சாராதவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன். மார்ட்டினின் மகள் டெய்ஸியைத்தான் மணந்திருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. இவர்கள் இருவரும் இணைந்து சிறுதொழில்களுக்கு கடன் வழங்கும் நிறுவனம் நடத்திவருகிறார்கள். டெய்ஸி கல்லூரியில் படிக்கும்போது அதாவது கடந்த 2011-ம் ஆண்டு தனிப்பட்ட காரணங்களுக்காக தற்கொலைக்கு முயன்றதாகவும் அப்போது போலீஸாரால் சொல்லப்பட்டது.

லாட்டரி மார்ட்டினை 2011-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியேற்றதும் குண்டர் சட்டத்தில் அடைத்தது குறிப்பிடத்தக்கது. அதோடு லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு பெருமளவில் தேர்தல் நிதியும் அளித்திருக்கிறது.

ஆதவ் அர்ஜுனா - டெய்ஸி
ஆதவ் அர்ஜுனா - டெய்ஸி

'வாய்ஸ் ஆஃப் காமன்' என்கிற நிறுவனத்தை நடத்திவந்த ஆதவ் அர்ஜுனாதான் திருச்சியில் ‘வெல்லும் சனநாயகம்' எனும் மாநாட்டை விசிக வெற்றிகரமாக நடத்துவதற்கு காரணமாக இருந்தவர். கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் இந்த மாநாட்டுக்கு கூடியதைப் பார்த்து தமிழகம் மட்டுமல்ல, அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி வரை ரிப்போர்ட் போனது. விசிக கூட்டத்துக்கு வந்த மக்களைப் பார்த்து திருமாவளவனே வியந்துபோனார். இதன் தொடர்ச்சியாகத்தான் ஆதவ் அர்ஜுனாவுக்கு கட்சியில் இன்னும் செல்வாக்கு கூடியது.

விசிக பொதுத்தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதும் ஆதவ் அர்ஜுனாவின் அறிவுரைப்படிதான் என்று சொல்லப்படுகிறது. கூடைப்பந்து வீரரான ஆதவ் அர்ஜுனா தேர்தல் வியூகங்களை வகுப்பதில் கைதேர்ந்தவர் என்று சொல்லப்படுவதோடு, விசிகவின் ஆன்லைன் சேர்க்கை உள்பட ஐடி பிரிவையும் கையில் வைத்திருக்கிறார். இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் பதவி வகிக்கிறார். 

திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜுனா
திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜுனா

‘’ஆதவ் அர்ஜுனா சொல்லித்தான் திருமா செயல்படுகிறார் என்பதல்ல. ஆதவ் அர்ஜுனாவும் இன்றைய அரசியலுக்குத் தேவையான கருத்துகளை தலைவருக்கு எடுத்துச்சொல்கிறார். அதில் தேவையானவற்றை தலைவரும் எடுத்துக்க்கொள்கிறார். திருமா அவர்கள் கேட்பார் பேச்சைக் கேட்டு ஆடும் பொம்மை அல்ல. அவருக்கு 40 வருட அரசியல் அனுபவம் இருக்கிறது'’ - விசிக-வின் மூத்த தலைவர். 

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com