திமுகவின் முக்கிய ஆளுமை... பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டது ஏன்?
2021 தேர்தலில் திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றப்பிறகு முதல்முறையாக பெரிய அளவில் அமைச்சரவை மாற்றம் இன்று நடைபெறுகிறது. துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க இருக்கும் நிலையில், 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டு 4 பேர் புதிதாக அமைச்சர்களாகப் பொறுப்பேற்க இருக்கிறார்கள்.
புதிய அமைச்சர்களோடு, முக்கிய அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள கோவி.செழியனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர் என்கிற முறையில் ஆளுநருடன் அடிக்கடி உயர்கல்வித்துறை அமைச்சர்தான் நெருக்கமான முறையில் செயல்பட வேண்டியிருக்கிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக பொன்முடிக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் முட்டலும் மோதலுமாக இருப்பதோடு, பொன்முடி மீது வழக்கும் தொடரப்பட்டது. ஆளுநர் ரவியையும் மத்திய அரசு மாற்றும் முடிவில் இல்லை என்பதால் அமைச்சரை மாற்றும் முடிவை எடுத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினரான கோவி.செழியன் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தவர் என்பதோடு, முனைவர் பட்டமும் பெற்றவர். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரை உயர்கல்வித்துறை அமைச்சர் ஆக்குவதன் மூலம் கவர்னருடன் இருக்கும் மோதல்போக்கை குறைக்கலாம் என்பது திமுகவின் கணக்கு. அதோடு துணை முதல்வராகப் பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் கோவி.செழியன் மேல் நல்ல மரியாதை உண்டு என்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் திமுகவினர்.