England vs Netherlands: சவுத்கேட்டின் சப்ஸ்டிட்யூட் டெக்னிக்... ராஜதந்திரத்தால் வென்ற இங்கிலாந்து!
யூரோ 2024 தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இன்று நள்ளிரவு இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய நொடியில் இருந்தே பந்தை யாருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்கிற போட்டா போட்டியில் ஆட்டம் 7-வது நிமிடத்தை நெருங்கிக்கொண்டிருக்க, நெதர்லாந்து வீரர் சிமோன் அடித்த ஸ்ட்ரைக் இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்டைக் கடந்து கோல் போஸ்ட்டுக்குள் நுழைய நெதர்லாந்து 1-0 என லீட் பிடித்தது.
நெதர்லாந்து கோல் அடித்தாலும், லீடிங்கில் இருந்தாலும் இங்கிலாந்து வீரர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. இந்த ஆட்டத்தின் முதல் 45 நிமிடங்கள் இந்த யூரோ தொடரிலேயே மிகச்சிறந்த முதல் பாதி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஆட்டத்தில் அனல் பறந்தது. இங்கிலாந்து வீரர்கள் கோல் அடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதற்குப் பலனாக ஹேரி கேனின் ஈக்வலைசர் பெனால்டியில் இருந்து வந்தது. வீடியோ ரீப்ளே மூலம் டென்சில் டம்ஃப்ரைஸ் கேனின் காலிலேயே உதைத்தது கன்ஃபர்ம் ஆக, இங்கிலாந்துக்கு பெனால்ட்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலைப்பெற்றது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர்கள் இன்னும் வேகமாக ஆட, இங்கிலாந்தின் முன்னணி வீரர்களான கேப்டன் ஹேரி கேன், ஸ்ட்ரைக்கர் ஃபில் ஃபோடன் இருவருமே டயர்ட் ஆக, இன்னொருபக்கம் நெதர்லாந்து வீரர்களும் கோல் அடிக்கமுடியாமல் சோர்வடைய, ஆட்டம் கடைசி 10 நிமிடத்துக்குள் நுழைந்தது.
இங்கிலாந்து 1-1 நெதர்லாந்து என இருவருமே சமநிலையில் இருக்க, இந்த நேரத்தில் யார் கோல் அடிக்கிறார்களோ அவர்கள்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைவார்கள் என்கிற கட்டத்தில் இங்கிலாந்தின் பயிற்சியாளர் சவுத்கேட் ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார்.
இங்கிலாந்தின் கேப்டனும், முதல் பாதியில் இங்கிலாந்துக்கு கோல் அடித்தவருமான ஹேரி கேனையும், மற்றுமொரு முன்னணி ஸ்ட்ரைக்கரான ஃபில் ஃபோடனையும் பென்ச்சுக்கு அனுப்பி அவர்களுக்கு பதிலாக ஓலி வாட்கின்ஸையும், கோல் பால்மரையும் களத்தில் அனுப்பினார். சவுத்கேட்டின் இந்த ராஜதந்திரம் இங்கிலாந்துக்கு கைகொடுத்தது.
ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் அதாவது 90-வது நிமிடத்தில் பால்மரின் பாஸை, வாட்கின்ஸ் கோலாக மாற்றி இங்கிலாந்தை 2-1 என வெற்றிபெறவைத்துவிட்டார். தொடர்ந்து இரண்டாவது முறையாக யூரோ கோப்பையின் இறுதிப்போட்டிக்குள் நுழைகிறது இங்கிலாந்து. ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் ஸ்பெயினை சந்திக்கிறது இங்கிலாந்து!