England Vs Spain : தாக்கும் திறமையா, பதுங்கும் வியூகமா... வெல்லப்போவது யார்?!
2024 யூரோ கோப்பை இறுதி ஆட்டத்துக்கான நேரம் நெருங்கிவிட்டது. கால்பந்து உலகின் இருபெரும் ஜாம்பவான்கள் ஸ்பெயினும் இங்கிலாந்தும், ஜெர்மனியின் பெர்லின் மைதானத்தில் நேருக்கு நேர் மோதத் தயாராக உள்ளன. இன்று நள்ளிரவு இந்திய நேரப்படி 12.30 மணிக்கு ஆட்டம் தொடங்கயிருக்கிறது!
ஸ்பெயினின் ஆதிக்கம்!
‘’வெற்றிக்கான தாகம்… அனல் பறக்கும் ஆட்டம்!" - இதுதான் ஸ்பெயின் அணியின் கோஷம். இதுவரை இந்த யூரோவில் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றிருப்பது மட்டுமல்ல மிக அதிகபட்சமாக 13 கோல்கள் அடித்திருக்கிறது. வெறும் 3 கோல்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருக்கிறது. டிராவையோ, தோல்வியையோ சந்திக்கவில்லை. நடப்பு சாம்பியன் இத்தாலி, போட்டியை நடத்தும் ஜெர்மனி, பவர்ஃபுல் அணியான பிரான்ஸ், முன்னணி அணிகளில் ஒன்றான குரோஷியா என முக்கிய அணிகளை எல்லாம் வீழ்த்தியிருக்கிறது ஸ்பெயின். இதன்மூலம் ஸ்பெயின் எவ்வளவு வலிமையோடு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
இங்கிலாந்தின் பதுங்கிப்பாயும் டெக்னிக்!
"தொடர்ந்த போராட்டம், வெற்றிக்கான வியூகம்!" - இதுதான் இங்கிலாந்து அணியின் அடிப்படை. இங்கிலாந்து அணி தனிப்பட்ட வீரர்களின் திறமையைக் கூட்டாக சேர்ந்து வெளிப்படுத்தி வெற்றிகாண்கிறது. கேப்டன் ஹேரி கேன், ஜூட் பெல்லிங்ஹாம், புக்காயோ சகா, டெக்லைன் ரைஸ், ஃபில் ஃபோடன், அரையிறுதியில் கோல் அடித்த ஓலி வாட்கின்ஸ் என இவர்களின் ஒருங்கிணைந்த ஆட்டத்தால் வெற்றிபெறுகிறது இங்கிலாந்து. இவர்கள் ஸ்பெயினைப் போல எதிரணிகளை ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தவில்லை. ஆனால் இங்கிலாந்தின் ஆட்டமுறை வியூகங்கள் நிறைந்ததாக இருக்கிறது. தேவையைப் பொருத்தி அணியிம் வியூகத்தை பயிற்சியாளர் சவுத்கேட் மாற்றிக்கொண்டேயிருப்பது இங்கிலாந்துக்குப் பெரும்பலம்.
ஸ்பெயினின் தாக்குதல் டேக்டிக்ஸ்!
கேப்டன் Luis de la Fuente-ன் கீழ், ஸ்பெயின் தாக்குதல் ஆட்டத்தையே ஆடுகிறது. நிகோ வில்லியம்ஸ் மற்றும் லமைன் யமல் போன்ற இளம் வீரர்களின் வேகமும், துல்லியமான பாஸ்களும் ஸ்பெயினுக்கு டபுள் போனஸ். டேனி ஓல்மோ மற்றும் ஃபேபியன் ரூயிஸும் பக்கபலமாக இருப்பதால் 90 சதவிகிதம் துல்லியமான பாஸ் ரேட்டிங்கைக் கொண்டிருக்கிறது ஸ்பெயின். ஆரம்பத்திலேயெ ஸ்பெயின் கோல் அடித்து முன்னேறினால் இங்கிலாந்தால் மற்ற அணிகளை விரட்டிப் பிடித்ததுபோல பிடிப்பது சிரமம்.
இங்கிலாந்தின் ப்ராக்டிக்கல் அணுகுமுறை!
கேரத் சவுத்கேட்டின் இங்கிலாந்து மிகவும் பிராக்டிக்கலாக ஒவ்வொரு போட்டியையும் அணுகுகிறது. திறமையான தாக்குதலோடு, பவர்ஃபுல் டிஃபென்ஸையும் கொண்டிருக்கிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 7 கோல்கள்தான் அடித்திருக்கிறார்கள் என்றாலும், ஸ்பெயினுக்கு இணையாக பாஸிங் துல்லியத்தில் 90 சதவிகிதத்தைக் கொண்டிருக்கிறது இங்கிலாந்து.
நேருக்கு நேர்!
இங்கிலாந்தும் ஸ்பெயினும் 1929-ம் ஆண்டு முதல் இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் இங்கிலாந்து 14 போட்டிகளில் வெல்ல, ஸ்பெயின் 10 போட்டிகளில் வென்றிருக்கிறது. வெற்றி,தோல்விகளின்படி இங்கிலாந்துதான் ஸ்பெயினைவிட பெரிய அணி என்பதுபோல தோன்றினாலும், சமீபமாக கால்பந்தில் ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, 2000-ம்களில் இருந்து இங்கிலாந்துக்கு எதிராக ஒன்பது போட்டிகளில் விளையாடி மூன்று முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது.
வீரர்களின் திறமையும், பயிற்சியாளர்களின் வியூகங்களும், இந்த மாபெரும் மோதலில் யாரை வெற்றியாளராக உருவாக்கப்போகின்றன. ஸ்பெயினின் சுறுசுறுப்பான தாக்குதல் ஆட்டமா, இங்கிலாந்தின் பலமான பாதுகாப்பு அணுகுமுறையா? யார் ஜெயித்தாலும், இந்த யூரோ கோப்பை இறுதி ஆட்டம், கால்பந்து ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத ஒரு தருணமாகப் பதியப்போகிறது.
எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் இந்த மோதல், வெற்றியின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தும் தருணமாக இருக்கும்!