பிரான்ஸ் நாட்டுத் தேர்தல், அரசியல் குழப்பங்கள், எதிர்கால அரசியல் நிச்சயமின்மை ஆகியவை பிரான்ஸ்ஸின் விளையாட்டு வீரர்களையும் பாதித்திருக்கிறது என்பது அவர்களின் ஆட்டத்தில் தெரிகிறது.
இந்த யூரோ கோப்பையில் தோல்வியையே சந்திக்காத அணி என்பது மட்டும் அல்ல… விளையாடிய அத்தனைப் போட்டிகளிலுமே ரிசல்ட்டைக் கொடுத்து இந்த யூரோவைக் கொண்டாட்டமாக மாற்றியிருக்கிறது ஸ்பெயின். 5 போட்டிகளில் 11 கோல் அடித்திருக்கிறார்கள். 35 முறை டார்க்கெட்டை நோக்கி பந்தை உதைத்திருக்கிறார்கள் என ஸ்பெயினின் புள்ளி விவரங்களே இந்த யூரோவில் அவர்கள் சூப்பர் ஃபார்மில் இருக்கிறார்கள் என்பதைச் சொல்கிறது. ஆட்டம் ஜெர்மெனியில் நடந்தாலும் சொந்த ஊரில் போட்டிகள் நடப்பதுபோல கொண்டாட்டாத்துடனும், உற்சாகத்துடனும் ஆடுகிறார்கள் ஸ்பெயின் வீரர்கள்!
கிலியன் எம்பாப்பே தலைமையிலான இந்த அணி உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் இல்லை. பிரான்ஸ் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. ஒரு போட்டியிலும் தோல்வியில்லை என்றாலும் மூன்று போட்டிகளை டிரா செய்திருக்கிறது. இதுவரை அடித்திருக்கும் கோல்கள் மொத்தமே மூன்றுதான். புள்ளி விவரங்களே பிரான்ஸின் கவலையான நிலைமையை சொல்லிவிடுகின்றன. உண்மையை சொல்லப்போனால் மிகவும் போரிங்கான ஒரு ஆட்டத்தை இதுவரை ஆடியிருக்கிறது பிரான்ஸ்!
ஸ்பெயின் வீரர்கள் திறமையும், தாக்குதல் ஆட்டம் ஆடவேண்டும் என்கிற துடிப்பும், ஒவ்வொரு நொடியிலும் கோலுக்கான முயற்சி எடுக்கிற அர்ப்பணிப்பும் என களத்தில் மிக மிக நேர்மையாக ஆடுகிறார்கள். டானி கர்வஜல், ராபின் லு நார்மன்ட், பெட்ரி போன்ற முக்கிய வீரர்களை காயத்தால் இழந்த போதும், ஸ்பெயின் பின்னடவை சந்திக்கவில்லை. காரணம் முன்னணி வீரர்களுக்கு இணையான வீரர்களை பென்ச்சில் வைத்திருக்கிறது ஸ்பெயின்.
பிரான்ஸ் ஐந்து போட்டிகளில் மூன்று கோல்களை மட்டுமே அடித்து பெனால்டிகளில் பார்த்துக்கொள்ளலாம் என்கிற ஆட்டமுறை அவர்களிடம் நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது. அட்டாக்கிங் ஆட்டம் ஆடாமல், கோல்களை விட்டுக்கொடுத்துவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையோடு தற்காப்பு ஆட்டம் ஆடுகிறது பிரான்ஸ்.
கிலியன் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணி அரையிறுதியிலும் தற்காப்பு ஆட்டமே ஆடும் என எதிபார்க்கலாம். ஸ்பெயின் தொடர் வெற்றிகள் தந்த உற்சாகத்தில் ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே கோல் அடிக்கும் முயற்சிகளில் இறங்கும் என்பதால் பிரான்ஸ் எச்சரிக்கையுடனேயே ஆடும். கிலியன் எம்பாப்பே இராண்டாம் பாதியில் எகிறி அடிக்கலாம்!
நாக் அவுட் போட்டிகளில் ஸ்பெயின் இன்னும் கடுமையாக விளையாடும் என்பதால், நம்பிக்கையிழந்து காணப்படும் பிரான்ஸின் டிஃபென்ஸை ஸ்பெயின் வீரர்கள் எளிதாக உடைக்கலாம். 16 வயதேயான லமைன் யமல் போன்ற திறமையான வீரர்கள் பிரான்ஸுன் டிஃபென்ஸுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள். அதேப்போல் நிகோ வில்லியம்ஸ் அட்டாக்கிங் ஆட்டம் ஆடுகிறார். இவர்களை சமாளிக்கக்கூடிய வியூகங்களை பிரான்ஸ் வைத்திருக்கிறதா அல்லது உற்சாகம் இல்லாமல் ஆடி ஆட்டத்தை இழக்கப்போகிறதா என்பது இன்று இரவு தெரிந்துவிடும்!
மொத்தத்தில் வெற்றியின் தேவதை ஸ்பெயினின் பக்கமே நிற்கிறது. வாழ்க ஸ்பெயின்!