உலகின் மிகச்சிறந்த அணிகளின் மோதலாகப் பார்க்கப்படும் இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்? போட்டியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள் இங்கே!
ஸ்பெயின், ஜெர்மனி என இரண்டு அணிகளுமே இந்த யூரோ கோப்பையில் ஒரு தோல்வியைக்கூட சந்திக்கவில்லை. 4 போட்டிகளில் மூன்றில் வெற்றிபெற்று 1 போட்டியில் டிரா செய்தது ஜெர்மனி. இன்னொருபக்கம் ஸ்பெயின் 4 போட்டிகளிலுமே வெற்றியை மட்டுமே பெற்று காலிறுதிக்குள் வந்திருக்கிறது.
கோல் கணக்கில் ஜெர்மனியே லீடிங்கில் இருக்கிறது. 4 போட்டிகளில் ஜெர்மனி 10 கோல்கள் அடித்திருக்க, ஸ்பெயின் 9 கோல்கள் அடித்திருக்கிறது.
ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் ஜார்ஜியாவை 4-1 என தோற்கடித்ததன் மூலம் தனது வலிமையை உணர்த்தியது ஸ்பெயின். ஜெர்மனி மறுபக்கம் ஸ்காட்லாந்தை 4-0, டென்மார்க்கை 2-0, ஹங்கேரியை 2-0 என முக்கியமான அணிகளைத் தங்களுக்கு எதிராக கோலே அடிக்கவிடாமல் வீழ்த்தியிருக்கிறது.
ஜெர்மனியை வீழ்த்துவது அவ்வளவு சுலபம் இல்லை என்பதோடு, சொந்த மண்ணில் நடப்பது ஜெர்மனிக்கான பலம். இதனால் தன்னம்பிக்கையோடும், மக்களின் பேராதரவோடும் ஜெர்மனி விளையாடும்.
ஆரம்பம் முதலே அட்டாக்கிங் ஆட்டத்தை ஆடுவதே ஜெர்மனியின் வியூகமாக இருக்கும். விங்ஸில் இருக்கும் வீரர்களை மாற்றிக்கொண்டே இருக்கும். ஃபார்வேர்டுகள் கய் ஹாவர்ட்ஸ், நிக்லாஸ் ஃபுல்க்ரக், தாமஸ் முல்லர் என வேகமாக இருப்பதால் ஆரம்பத்திலேயே ஸ்பெயினின் டிஃபென்ஸை உடைக்கப்பார்க்கும் ஜெர்மனி.
ஜோஷுவா கிமிச், டேவிட் ரம், மாக்சிமிலியன் மிட்டல்ஸ்டாட் என மூவருமே ஃபார்வேர்டுகளுக்குப் பக்கபலமாக இருந்து ஆடுவார்கள் என்பது ஜெர்மனியின் பலம்.
அடுத்த மெஸ்ஸி என புகழப்படும் ஸ்பெயினின் லாமைன் யமல் மற்றும் நிகோ வில்லியம்ஸ் கூட்டணி ஜெர்மனிக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களின் வேகமான பாஸ்கள் ஜெர்மனியின் டிஃபெண்டர்களை சோதிக்கக் கூடும்.
இரண்டு அணிகளுமே க்ராஸ் ஆட்டத்தில்தான் பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. டச்லைனில் இருந்து பெனால்ட்டி ஏரியாவுக்கு நேரடியாகப் பந்தைக்கொண்டுவரும் இந்த க்ராஸ் ஆட்டம் இருவருக்குமே கைகொடுக்கும் என்பதால் போட்டி கடுமையானதாக இருக்கும்.
மிட்ஃபீல்ட்டில் இரண்டு அணிகளுக்குமே பலமான வீரர்களாக ஜெர்மனிக்கு டோனி க்ரூஸும், ஸ்பெயினுக்கு ரோட்ரியும் உள்ளனர். ஸ்பெயினின் மூவர் கூட்டணியான ரோட்ரி, பெட்ரி, ஃபேபியன் ரூயிஸ் பந்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக்கொண்டு ஜெர்மனிக்கு ஆட்டம் காட்டக்கூடும்.
மொத்தமாகப் பார்க்கும்போது மிட்ஃபீல்ட்டிலும், ஃபார்வேர்டிலும் ஸ்பெயின் ஜெர்மனியைவிட பலமாக இருப்பதால் வெற்றிவாய்ப்பு ஸ்பெயினுக்கே அதிகமாக இருக்கிறது.