Spain Vs France : 16 வயது லமைன் யமல் நிகழ்த்திய அற்புதம்... பிரான்ஸை வீழ்த்தியது ஸ்பெயின்!
இன்று நள்ளிரவில் ஜெர்மனியின் மியூனிச் நகரில் நடைபெற்றது யூரோ கோப்பையின் முதல் அரையிறுதிப்போட்டி. இதுவரை விளையாடிய எல்லா போட்டிகளிலும் வெற்றியை மட்டுமே ருசித்த ஸ்பெயினும், அதிக போட்டிகளில் டிரா மட்டுமே செய்திருந்த பிரான்ஸும் மோதின.
ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் அட்டாக்கிங் ஆட்டம் ஆட, ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்தில் கிலியன் எம்பாப்பே அடித்த கிராஸ் பாஸை சிறப்பான ஹெட்டர் மூலம் கோலாக்கி பிரான்ஸுக்கு 1-0 என முன்னிலை கொடுத்தார் கோலோ முவானி. அடுத்து இரண்டாவது கோல் அடிக்கும் வாய்ப்பையும் பெற்றது பிரான்ஸ். ஆனால், எம்பாப்பேவின் ஸ்ட்ரைக் கோல் போஸ்டைத்தாண்டிப்போய் விழுந்தது.
ஆட்டம் பிரான்ஸின் பக்கம் சென்றுகொண்டிருக்க, ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் பார்சிலோவின் செல்லப்பிள்ளையான 16 வயது லைமைன் யமல் கர்லிங் ஃபினிஷ் ஷாட் மூலம் ஈக்குவலைசர் கோல் அடித்து யூரோ தொடரில் மிக இளம் வயதில் கோல் அடித்தவர் என்கிற சாதனையைப் படைத்தார்.
இந்த கோல் அடித்த அடுத்த நான்கு நிமிடங்களில் டேனி ஓல்மோ ஸ்பெயினுக்கான இரண்டாவது கோலை அடித்தார். ஓல்மாவின் டிரைவ் ஷாட் டிஃபென்டர் ஜூல்ஸ் கவுண்டேவின் கால்களைக் கிட்டத்தட்ட உரசி, கோல்கீப்பர் மைக் மைக்னனைக் கடந்து கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்தது. ஸ்பெயின் 2-1 என 25 நிமிடங்களுக்குள் முன்னிலைப் பெற்றுவிட்டது.
இதன்பிறகு கிலியன் எம்பாப்பேவின் பிரான்ஸ் ஈக்குவலைசர் கோல் அடிக்க எவ்வளவோ முயன்றும் அவர்களின் முயற்சி கைகூடவில்லை. இறுதியில் 2-1 என வெற்றிபெற்று ஸ்பெயின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது.
இன்று இரவு நடைபெற இருக்கும் நெதர்லாந்து - இங்கிலாந்துக்கு இடையேயான ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியோடு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) இறுதிப்போட்டியில் மோத இருக்கிறது ஸ்பெயின்.