Euro 2024 : இங்கிலாந்தை சம்பவம் செய்த ஸ்பெயின்… திக் திக் ஆட்டத்தில் 2-1 என த்ரில் வெற்றி!
தகுதியானது தப்பிப்பிழைக்கும் என்பதைப்போல இந்த யூரோவை வெல்ல எல்லா தகுதிகளும் கொண்ட அணியாக இருந்த ஸ்பெயின் கோப்பையை வென்றிருக்கிறது. விளையாடிய அத்தனைப் போட்டிகளிலுமே வெற்றியை மட்டுமே ருசித்து எதிர் அணிகள் மீது பலம் வாய்ந்த தாக்குதல் ஆட்டம் ஆடி யூரோ 2024 கோப்பையைத் தன் வசமாக்கியிருக்கிறது.
டேக்டிக்கல் ஆட்டம்!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில், முதல் பாதியின் போது இரு அணிகளும் டேக்டிக்கலாக விளையாடின. அதாவது எதிர் அணியை ஆடவிட்டு, அவர்களின் வியூகம் என்ன என்பதைப் பார்த்து அதற்கேற்படியான ஆட்டத்தை ஆடின. முதல் பாதியில் இங்கிலாந்தின் ஃபில் ஃபோடன் அடித்த ஸ்ட்ரைக்கை அற்புதமாகத் தடுத்தி நிறுத்தினார் ஸ்பெயினின் கோல் கீப்பர் உனாய் சிமோன். இதனால் முதல் பாதி ஆட்டம் 0-0 என முடிந்தது.
ஸ்பெயினின் தாக்குதல்!
இரண்டாம் பாதியில் ஸ்பெயின் தனது வழக்கமான தாக்குதல் ஆட்டத்தை ஆட ஆரம்பித்தது. இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பித்த இரண்டே நிமிடங்களில், டேனி கர்வஜலின் புத்திசாலித்தனமான பாஸ் லமைன் யமலுக்கு வர, அதை யமல் ஓட்டமும், ஓங்கிய கால்களுடனும் இருந்த நிகோ வில்லியம்ஸுக்குத் தட்ட துல்லியமான ஃபினிஷ்ஷுடன் அதை கோல் ஆக்கினார் நிகோ வில்லியம்ஸ். ஸ்பெயின் 1-0 என முன்னிலைப் பெற்றது.
அதிரடியான ஈக்குவலைசர்!
ஸ்பெயினின் ஆதிக்கம் தொடர்ந்தது. டேனி ஓல்மோ மற்றும் அல்வரோ மொராட்டா இருவரும் மிட்ஃபீல்ட்டில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் பந்தை வைத்துக்கொள்ள, அவர்களிடம் இருந்து பந்தைப் பறிக்க இங்கிலாந்து வீரர்கள் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அந்த போராட்டத்துகான பலனாக புகாயோ சாகாவின் கிராஸ் மற்றும் ஜூட் பெல்லிங்ஹாமின் லே-ஆஃப், கோல் பால்மருக்கு வர அவர் அதை கோல் ஆக்க, ஆட்டம் 1-1 என சமநிலைப்பெற்றது.
ஸ்பெயினின் வெறிகொண்ட வேகம்!
இங்கிலாந்து மீண்டும் எழுச்சி பெற்ற போதிலும், அடுத்த நான்கு நிமிடங்களில் ஸ்பெயின் தனது இரண்டாவது கோலை அடித்துவிட்டது. மைக்கேல் ஒயர்சபால், மார்க் குகுரெல்லாவின் கிராஸைப் பயன்படுத்தி, அட்டகாசமான கோலை அடித்தார். ஆட்டம் முடிவடைய சில நொடிகளே இருந்த நிலையில், இங்கிலாந்தின் பால்மர் மீண்டும் ஹெட்டர் மூலம் கோல் அடிக்க முயற்சி செய்ய, அதை உனாய் சிமோன் தடுக்க, மீண்டும் டெக்லான் ரைஸ் ஹெட்டர் மூலம் கோல் அடிக்க அதை டேனி ஓல்மா தடுக்க கடைசி நிமிட கண்டத்தில் இருந்து தப்பித்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது ஸ்பெயின். மீண்டும் ஒருமுறை இறுதியாட்டத்தில் தோல்வியை சந்தித்திருக்கிறது ஹேரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி!
லமைன் யமல், நிகோ வில்லியம்ஸ்
நிகோ வில்லியம்ஸ் தாக்குதல் மற்றும் தற்காப்பு இரண்டிலும் பெரும் பங்களிப்பை வழங்கியதால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. 17 வயது இளம் நாயகன் லமைன் யமல் தொடர் நாயகன் விருதை வென்றார். நான்காவது முறையாக யூரோவை வென்ற முதல் அணி என்கிற சாதனையை இந்தவெற்றியின் மூலம் படைத்திருக்கிறது ஸ்பெயின். அதேப்போல் யூரோ தொடரில் ஏழு ஆட்டங்களையும் வென்ற முதல் அணி ஸ்பெயின்.இந்த வரலாற்று வெற்றியால், ஐரோப்பாவின் மிகவும் பலம் வாய்ந்த அணியாக ஸ்பெயின் தனது இடத்தை உறுதி செய்திருக்கிறது.
லமைன் யமல், நிகோ வில்லியம்ஸ் என உலகின் தலைசிறந்த இளம் வீரர்களைக் கொண்டுள்ள ஸ்பெயின் இனி தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை... இனிவரும் காலம் கால்பந்து உலகில் ஸ்பெயினின் ஆதிக்கத்தால் நிறைந்திருக்கும்!