EURO 2024 : ரொனால்டோ Vs எம்பாப்பே… ஸ்பெயினோடு மோதும் ஜெர்மனி… யூரோ காலிறுதியில் 8 அணிகள்!
ஜெர்மனி
யூரோ கோப்பையை நடத்தும் ஜெர்மனி ஸ்பெயினுடன் மோதும் முதல் காலிறுதிப்போட்டி ஜூலை 5-ம் தேதி இரவு 9.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. லீக் போட்டிகள், ரவுண்ட் ஆஃப் 16 என இரண்டு சுற்றுகளிலுமே மிகச்சுலபமாக எதிர் அணிகளைத் தோற்கடித்தது ஜெர்மனி. குரூப் ஏ-வில் இடம்பெற்றிருந்த ஜெர்மனி ஸ்காட்லாந்தை 5-0 என தோற்கடித்து பின்னர் ஹங்கேரியையும் 2-0 வீழ்த்தி ஸ்விட்சர்லாந்துடன் மட்டும் டிரா செய்து குழுவில் முதலிடம் பிடித்து ரவுண்ட் 16 சுற்றுக்குள் நுழைந்தது. இந்த நாக் அவுட் சுற்றில் டென்மார்க்கை 2-0 என தோற்கடித்து கால் இறுதிக்குள் நுழைந்திருக்கிறது. மொத்தம் நான்கு போட்டிகளில் விளையாடி 10 கோல்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறது ஜெர்மனி. கால் இறுதிப்போட்டியில் ஐரோப்பாவின் இன்னொரு பலமான அணியான ஸ்பெயினை சந்திக்கிறது ஜெர்மனி.
முக்கிய வீரர்கள்
ஜமால் முசியாலா
19 வயதேயான ஜமால் முசியாலா நான்கு போட்டிகளில் விளையாடி மூன்று கோல் அடித்து அசத்தியிருக்கிறார். ஜெர்மனியின் எதிர்காலமாக மாறியிருக்கும் ஜமால் நாக் அவுட் போட்டிகளில் பிரமிக்கவைப்பார் என எதிர்பார்க்கலாம்.
İlkay Gündoğan
ஜெர்மனியின் கேப்டனான குண்டோகன், ஜேர்மனியின் மிட்ஃபீல்டில் அனுபவமும், புத்திசாலித்தனமும் கலந்த வீரராக சக வீரர்களை வழிநடத்தி அவர்கள் கோல் அடிக்கத் தூண்டுகோலாக இருக்கிறார்.
Maximilian Mittelstädt
ஜெர்மனியின் டிஃபெண்டரான மேக்ஸிமில்லியன் களத்தில் மிரட்டுகிறார். இவரைத்தாண்டி பந்து ஜெர்மனியின் கோல் போஸ்ட்டுக்குள் நுழைய முடியாத அளவுக்கு கடுமையாக டிஃபெண்ட் செய்கிறார் மேக்ஸிமில்லியன்.
பயிற்சியாளர்: ஜூலியன் நாகெல்ஸ்மேன்
நாகெல்ஸ்மேன் ஜெர்மனியை ஒரு பலமான டீமாக உருவாக்கி வைத்திருக்கிறார். இந்த முறை கப்பு நமக்குத்தான் என உற்சாகத்தில் இருக்கிறார்கள் ஜெர்மனி ரசிகர்கள். எந்த நேரத்தில் எந்த மாற்று வீரரைக் களமிறக்க வேண்டும், யாரை வெளியே எடுக்கவேண்டும், எப்படி ஆட வேண்டும் எனத் தனது வியூகங்களால் அசத்துகிறார் நாகெல்ஸ்மேன்.
ஸ்பெயின்
ஜெர்மனியைப் போலவே இதுவரை எதிர் அணிக்கு ஒரே ஒரு கோல் மட்டுமே விட்டுக்கொடுத்திருக்கிறது ஸ்பெயின். விளையாடிய நான்கு போட்டிகளிலுமே வெற்றி, ஒரு டிரா கூட இல்லை. 4 போட்டிகளில் இதுவரை 9 கோல்கள் அடித்திருக்கிறது ஸ்பெயின். ஜார்ஜுயாவுக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் 4 கோல்கள் அடித்தது. அதேப்போல் லீக் சுற்றில் நடப்பு சாம்பியன் இத்தாலியையும் 1-0 என தோற்கடித்தது ஸ்பெயின்.
முக்கிய வீரர்கள்!
லாமைன் யமல்!
அடுத்த மெஸ்ஸி என கொண்டாடப்படும் 16 வயதேயான லாமைன் யமல் இதுவரை கோல் அடிக்கவில்லை என்றாலும் மொராட்டா கோல்கள் அடிக்க துல்லியமான பாஸ்களை வழங்கியவர். நாக் அவுட்டில் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.
ரோட்ரி!
ரோட்ரி… ஸ்பெயின் வீரர்கள் வரிசையில் அட்டாக்கிங் மிட்பீல்டர் மட்டுமல்ல இன்று உலகளவில் சிறந்த மிட்ஃபீல்டர்களில் ஒருவர் ரோட்ரி. இவர் களத்தில் இருந்தாலே எதிர் அணியினருக்கு கிலி பிடிக்கிறது.
பயிற்சியாளர்: Luis de la Fuente
De la Fuente மீண்டும் ஸ்பெயினை வெற்றிப்பாதைக்கு கொண்டுவந்திருக்கிறார். 2008 யூரோ, 2010 உலகக்கோப்பை, 2012 யூரோ என தொடர்ந்து கோப்பைகளை வென்றுகொண்டிருந்த ஸ்பெயின் அதன்பிறகு யூரோவை வெல்லவில்லை. ஆனால், ஸ்பெயினை மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்ல எதிரணியினரை டாமினேட் செய்து ஆடும் ஆட்டமுறையுடன் வழிநடத்துகிறார் டி லா ஃப்யுன்ட்டே.
போர்ச்சுகல்
போர்ச்சுகல் காலிறுதிக்குள் நுழைந்திருகிறது. ஆனால், இதற்கு கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ காரணம் அல்ல. கோல்கீப்பர் டியாகோ கோஸ்டாதான் இப்போது போர்ச்சுகலின் சூப்பர் ஸ்டார். இதுவரை 4 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று, ஜார்ஜியாவிடம் தோற்று, ரவுண்ட் ஆஃப் 16-ல் ஸ்லோவேனியாவிடம் பெனால்ட்டி ஷூட் அவுட்டில் வெற்றிபெற்று தட்டுத்தடுமாறி காலிறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது போர்ச்சுகல். இப்போது காலிறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியுடன் மோதுகிறது.
முக்கிய வீரர்கள்
கிறிஸ்டியானோ ரொனால்டோ
40 வயதை நெருங்கும் ரொனால்டோ தனது கடைசி யூரோ கோப்பையில் விளையாடுகிறார். இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் ஒரு கோல்கூட அடிக்கவில்லை. ஸ்லோவேனியாவுக்கு எதிரான பெனால்ட்டி ஷூட் அவுட்டில்தான் கோல் அடித்தார். ஆனால், இது கோலாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
புருனோ பெர்னாண்டஸ்
பெர்னாண்டஸ், பெர்னார்டோ சில்வாவுடன் இணைந்து, போர்ச்சுகலின் மிட்ஃபீல்டை எப்போதுமே அதிரடியாக வைத்திருக்கிறார். பிரான்ஸுக்கு எதிரான காலிறுதிப்போட்டியில் இவரது ஆட்டம் மிக முக்கியமானதாக இருக்கும்.
João Neves
19 வயதேயான போர்ச்சுகலின் மிட்ஃபீல்டர் ஜோவோ நெவ்ஸ். ஆனால், 39 வயதான ரொனால்டோவை விடவும் களத்தில் மெச்சூர்டாக ஆடுகிறார் நெவ்ஸ். போர்ச்சுகல் அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான்.
பயிற்சியாளர்: ராபர்டோ மார்டினெஸ்
மார்ட்டினெஸ் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதில் இருந்து போர்ச்சுகலை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். இவரது வியூகங்கள் சரியாக இருந்தால் பிரான்ஸை போர்ச்சுகல் வீழ்த்தக்கூடும்!
பிரான்ஸ்
கடுமையாகப் போட்டிப்போட்டு காலிறுதுக்குள் வந்து சேர்ந்திருக்கிறது பிரான்ஸ். ஆஸ்திரியாவை 1-0 என தோற்கடித்த பிரான்ஸ், நெதர்லாந்துக்கு எதிரானப் போட்டியில் கோல் அடிக்காமல், கோல் கொடுக்காமல் 0-0 என டிரா செய்தது. போலந்துக்கு எதிரான ஆட்டம் 1-1 என டிரா ஆனது. இதனால் லீக் சுற்றில் குரூப் டி பிரிவில் இரண்டாம் இடமே பிடித்தது பிரான்ஸ். ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் பெல்ஜியத்தை தோற்கடித்து இப்போது காலிறுதியில் போர்ச்சுகலுடன் மோதப்போகிறது.
முக்கிய வீரர்கள்
கிலியன் எம்பாப்பே (Kylian Mbappé)
லீக் போட்டிகளில் எம்பாப்பே காயம் காரணமாக ஒரு போட்டியில் விளையாடவில்லை. 3 போட்டிகளில் விளையாடி 1 கோல் அடித்திருக்கிறார். ரொனால்டோவின் படையை பிரான்ஸ் தோற்கடிக்கவேண்டுமானால் அது எம்பாப்பேவால் மட்டுமே முடியும். நாக் அவுட் போட்டிகளில் எம்பாப்பே சிறப்பாக ஆடக்கூடியவர் என்பதால் கிலியன் ஃபார்முக்கு வந்தால் செம மாஸாக இருக்கும்.
பிராட்லி பார்கோலா
21 வயது ஃபார்வேர்ட் பிளேயரான பிராட்லி பார்கோலா பிரான்ஸின் சொத்து. அவரது ஓட்டமும், உத்வேகமும் பிரான்ஸ் வீரர்களை களத்தில் உற்சாகப்படுத்துகிறது. காலிறுதிப்போட்டியில் இவர் கட்டாயம் ஆடுவார் என எதிர்பார்க்கலாம்.
பயிற்சியாளர்: டிடியர் டெஷாம்ப்ஸ்
உலக கால்பந்து அரங்கத்தில் பயங்கர புகழபெற்ற பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ். பிரான்ஸை தனது கூல் கோச்சிங் மூலம் வெற்றியை நோக்கி அழைத்துச்செல்ல வியூகங்கள் அமைத்துவருகிறார்.
இங்கிலாந்து
ரவுண்ட் ஆஃப் சிக்ஸ்டீனோடு இங்கிலாந்தின் கதை முடிந்திருக்கவேண்டியது. தப்பிப்பிழைத்து காலிறுதிக்குள் நுழைந்திருக்கிறது. 4 போட்டிகளில் விளையாடி 4 கோல்கள்தான் அடித்திருக்கிறது இங்கிலாந்து. லீக் சுற்றில் செர்பியாவுக்கு எதிராக 1-0 என வெற்றிபெற்ற ஹேரி கேன் அணியினர், டென்மார்க்குக்கு எதிராக 1-1, ஸ்லோவேனியாவுக்கு எதிராக 0-0 என லீக்கில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றனர். ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் 1-0 என ஸ்லோவாக்கிய லீடில் இருக்க ஆட்டம் முடிய சில நொடிகளே இருக்கும்போது ஜூட் பெல்லிங்ஹாம் அடித்த பை சைக்கிள் கிக் கோலால் டிரா செய்து, பின்னர் எக்ஸ்ட்ரா டைமில் ஹேரி கேன் இன்னொரு கோல் அடிக்க வென்றது இங்கிலாந்து. இப்போது காலிறுதிப்போட்டியில் ஸ்விட்சர்லாந்தை சந்திக்கிறது.
முக்கிய வீரர்கள்!
ஜூட் பெல்லிங்ஹாம்
இங்கிலாந்தில்தான் ஸ்டார் ப்ளேயர்கள் அதிகம். ஆனால் கோல் அடித்தவர்கள் குறைவு. பெல்லிங்ஹாம் அடித்த பை சைக்கிள் கோலால்தான் காலிறுத்திக்குள் நுழைந்திருக்கிறது இங்கிலாந்து. இவரது புத்திசாலித்தனமான ஆட்டம் காலிறுதிப்போட்டியில் நிச்சயம் கைகொடுக்கும் என்றே நம்பலாம்.
ஹாரி கேன்
இங்கிலாந்து அணியின் கேப்டன் கேன், இந்த யூரோவில் இரண்டு கோல்களை அடித்துள்ளார். எதிர் அணியினர் எப்படி ஆடுவார்கள் என்பதைக் கணித்து ஆடக்கூடிய திறமைபெற்றவர் கேன். சிறப்பான ஃபினிஷர் ப்ளஸ் பாஸிங்கில் வல்லவர். காலிறுதியில் இவரைத்தான் அதிகம் நம்பியிருக்கிறார் சவுத்கேட்.
கோல் பால்மர்
செல்சியாவின் மிட்பீல்டர் கோல் பால்மர். இவரது அமைதியான நம்பகத்தன்மையான ஆட்டத்துக்காக 'கோல்ட் பால்மர்' என்று அழைக்கப்படுபவர். 2023/24 சீசனில் செல்சியின் சிறந்த வீரர். சவுத்கேட் இவருக்கான நம்பிக்கையைத் தந்து களமிறக்கினால் பால்மர் சாதனைகள் படைப்பார்.
பயிற்சியாளர் : கரேத் சவுத்கேட்
கடந்த முறை யூரோ இறுதிப்போட்டி, உலகக் கோப்பை காலிறுதி மற்றும் அரையிறுதியைப் போட்டிகள் என நாக் அவுட்டில் அவுட்டாகும் சவுத்கேட் இந்தமுறையும் இங்கிலாந்தை வெற்றியை நோக்கி அழைத்துசெல்வாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
சுவிட்சர்லாந்து
விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 டிரா என மொத்தம் 7 கோல்கள் அடித்து காலிறுதிக்கு வந்துசேர்ந்திருகிறது ஸ்விட்சர்லாந்து. நடப்பு சாம்பியனான இத்தாலியை 2-0 என சம்பவம் செய்ததுதான் ஸ்விட்சர்லாந்தின் வலிமைக்கான சாட்சி. இங்கிலாந்துக்கு எதிராக மோதுவது கடுமையானதாகவே இருக்கும் என்றாலும் இத்தாலியை வீழ்த்தியவர்கள் இங்கிலாந்துக்கும் சர்ப்ரைஸ் தரலாம்.
முக்கிய வீரர்
கிரானிட் ஷக்கா
சுவிட்சர்லாந்தின் கேப்டனான ஷக்கா, குரூப் ஸ்டேஜில் இரண்டு முறை ஆட்ட நாயகன் விருதை வென்றிருக்கிறார்.
ரூபன் வர்காஸ்
பனிப்பிரதேசத்தின் மிட்ஃபீல்டர். இத்தாலிக்கு எதிராக மிகச்சிறந்த கோல் அடித்தார்.
பயிற்சியாளர்: முராத் யாகின்
2021-ம் ஆண்டு முதல் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருக்கும் யாகின், புத்திசாலித்தனமான முடிவுகளுடன் சுவிட்சர்லாந்தை காலிறுதிக்குள் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். சவுத்கேட்டா, யாகினா என்கிற போட்டிக்கான விடையும் காலிறுதியில் தெரிந்துவிடும்.
நெதர்லாந்து
உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் அதிகமுறை விளையாடிய, அதேசமயம் ஒருமுறையும் கோப்பையை வென்றிடாத அணியான நெதர்லாந்து 1988 யூரோ கோப்பையை மட்டும் வென்றிருக்கிறது. கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்குப்பிறகு நெதர்லாந்து வலுவான அணியோடு இந்த யூரோ கோப்பையில் நுழைந்திருக்கிறது. 4 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றிபெற்று, ஒன்றில் டிரா செய்து, ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்திருக்கிறது நெதர்லாந்து. ஆஸ்திரியாவிடம் 2-3 என தோற்ற நெதர்லாந்து ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் ருமேனியாவை 3-0 என தோற்கடித்தது. இதுவரை இந்த அணி 7 கோல்கள் அடித்திருக்கிறது. காலிறுதியில் துருக்கியை எதிர்கொள்கிறது நெதர்லாந்து.
முக்கிய வீரர்கள்
கோடி காக்போ
நான்கு போட்டிகளில் விளையாடி மூன்று கோல்கள் அடித்திருக்கும் கோடி காக்போ நெதர்லாந்தின் முக்கியமான ஃபார்வேர்டு வீரர். காக்போவைத்தான் அதிகம் நம்பியிருக்கிறது நெதர்லாந்து!
மெம்பிஸ் டெபே
காயங்களால் அவதிப்பட்டபோதும் மெம்பிஸ் டெபே டச்சு தாக்குதலின் நங்கூரமாக இருக்கிறார். காலிறுதியை ஒரு யுத்தம் போலத்தான் இவர் அணுகுவார் என எதிர்பார்க்கலாம்.
Jeremie Frimpong
ஐரோப்பிய லீக் சீசன்களில் முக்கியமான டிஃபெண்டராக விளையாடியவர் ஜெரிமி ஃபிரிம்பாங். நெதர்லாந்தின் முக்கிய வீரராக காலிறுதியில் நிச்சயம் இருப்பார் ஜெரிமி.
பயிற்சியாளர்: ரொனால்ட் கோமன்
நெதர்லாந்தின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று காலிறுதுக்குள் அழைத்துவந்திருக்கிறார் ரொனால்ட் கோமன். 1988-ல் நெதர்லாந்து யூரோ கோப்பையை வென்ற அணியில் வீரராக இருந்தவர் கோமன் என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கி
மூன்று வெற்றி ஒரு தோல்வியோடு காலிறுதிக்குள் வந்திருக்கும் துருக்கி இதுவரை 7 கோல்கள் அடித்திருக்கிறது. போர்ச்சுகலிடம் 0-3 என தோற்றவர்கள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஆஸ்திரியாவை 2-1 என தோற்கடித்திருக்கிறார்கள். இப்போது காலிறுதியில் நெதர்லாந்துடன் மோத இருக்கிறார்கள்.
முக்கிய வீரர்கள்!
Hakan Çalhanoğlu
துருக்கியின் கேப்டனான Çalhanoğlu, செக்கியாவுக்கு எதிராக தனது முதல் EURO கோலை அடித்து துருக்கியின் வெற்றிப்பயணத்தை தொடங்கிவைத்தவர்.
Arda Güler
டிரிப்ளிங்கிற்கு பெயர் பெற்ற ரியல் மாட்ரிட் வீரரான ஆர்டா குலர் EURO 2024-ன் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர்.
பயிற்சியாளர்: வின்சென்சோ மான்டெல்லா
பயிற்சியாளராக வின்சென்சோவுக்கு இது முதல் யூரோ. காலிறுதியே பெரிய சாதனைதான். நெதர்லாந்துக்கு சர்ப்ரைஸ் தருவார்களா என்பது சந்தேகமே!