ஜூலை 26-ம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 11-ம் தேதி நிறைவடைய இருக்கிறது.
இதுவரை வரலாற்றில் இல்லாத வழக்கமாக முதல்முறையாக தொடக்க விழா ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடத்தப்படாமல், பொதுவெளியில் அதாவது பாரிஸை சுற்று ஓடும் செய்ன் ஆற்றைச் சுற்றிலும் நடைபெற இருக்கிறது. 100 படகுகளில் 10,500 வீரர்கள், பயிற்சியாளர்கள் மிதக்கும் அணிவகுப்பில் பங்கேற்க இருக்கிறார்கள். தொடக்க நிகழ்சி 3 மணி நேரத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தம் 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. பார்வையாளர்களின் கண்களைக் கவரும் வகையில் பாரிஸைச்சுற்றிலும் ஈஃபிள் டவர் உள்பட வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளில் எல்லாம் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
கொரோனா காரணமாக 2021-ல் நடைபெற்ற டோக்கியோ 2020 ஒலிம்பிக்ஸில் இந்தியா ஏழு பதக்கங்கள் வென்றது. தடகள போட்டியான ஈட்டி எறிதலில் முதல்முறையாகத் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமைதேடித்தந்தார் நீரஜ் சோப்ரா. பாரிஸ் ஒலிம்பிக்கில் 16 விளையாட்டுகளில், 69 பதக்கப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் 112 இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் போட்டியிடுகிறார்கள். 5 ரிசர்வ் வீரர்களும் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
பிரான்ஸின் சுதந்திர உணர்வையும், போராட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை வண்ண ஃப்ரைஜ் தொப்பி சின்னம்தான் 2024 ஒலிம்பிக்கின் சின்னம். மூன்று வண்ணங்களும் பிரான்ஸின் தேசியக்கொடியை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாரிஸ் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஒரே புதிய போட்டி பிரேக்கிங் என அழைக்கப்படும் பிரேக் டான்ஸ் போட்டி. பாரிஸ் ஒலிம்பிக்கில்தான் முதல்முறையாக கலந்துகொள்ளும் போட்டியாளர்களில் சரிபாதி ஆண், பெண் போட்டியாளர்கள்.