நியூஸிலாந்துக்கு முதல் கிரிக்கெட் உலகக்கோப்பை... சாதனைகளால் சிறப்பித்த அமிலியா கெர்!
கனவுகளா, இலக்குகளா… இதை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். கனவுதான் இலக்கை நிர்ணயிக்கிறது. மனம் காணும் கனவு இதுதான் உங்கள் இலக்கு எனச்சொல்லி, நீங்கள் அதை நோக்கி உழைக்க, ஓட, சிந்திக்க ஆரம்பித்தால் அது நிச்சயம் ஒருநாள் நிறைவேறிவிடும். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அதில் சமீபத்திய உதாரணம்தான் அமிலியா கெர்.
2010 பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்து அப்போது நியூஸிலாந்து அணியில் துடிப்புமிக்க வீராங்கனைகளாக விளையாடிக்கொண்டிருந்த, சோஃபி டிவைன் மற்றும் சுசி பேட்ஸைப் போல நானும் நியூஸிலாந்து அணிக்காக விளையாடவேண்டும் என 10 வயது அமிலியா கெர் கண்ட கனவுதான் இன்று நியூஸிலாந்துக்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுத்தந்திருக்கிறது.
இப்போது 24 வயது இளைஞியாக, 37 வயது பேட்ஸுடனும், 35 வயது சோஃபி டிவைனுடனும் விளையாடி நியூஸிலாந்து அணிக்கு உலகப்பெருமையைத் தேடித்தந்திருக்கிறார் கெர்.
135 ரன்கள், 15 விக்கெட்டுகள் என இந்த உலகக்கோப்பை தொடர் முழுக்க அமிலியாவின் ராஜ்ஜியம்தான். இறுதிப்போட்டியில் பலம்பொருந்திய தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 43 ரன்கள் அடித்ததோடு, 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார் அமிலியா.
குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் கேப்டன் லாரா உல்வடார்ட்டின் விக்கெட்டை அவர்தூக்கிய விதம்தான் அல்ட்டிமேட். லீ தஹுவின் முந்தைய ஓவர் டாட் பால்களாகப் போக, இன்னொரு முனையில் இருந்த லாரா உல்வடர்ட்டின் பிரஷர் கூடியது. இதை சரியாகப் பயன்படுத்திய அமிலியா அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே கவரில் ஃபீல்டரை நிறுத்தி லாரா உல்வடர்ட்டின் விக்கெட்டைத் தூக்கினார்.
இதுதான் இறுதிப்போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு தென்னாப்பிரிக்க வீராங்கனைகள் நம்பிக்கை இழந்து ஆட, நியூஸிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுவிட்டது.
இந்த உலகக்கோப்பை வெற்றிக்கு நியூஸிலாந்து அணியின் அத்தனை வீராங்கனைகளுமே பாடுபட்டார்கள், தங்களின் பங்களிப்பை செய்தார்கள் என்றாலும் அமலியா கெர் இல்லை என்றால் நியூஸிலாந்துக்கு இந்த உலகக்கோப்பை இல்லை என்பதுதான் உண்மை!