James Anderson : வீரத்தின் வெளிச்சம் ஒருபோதும் மங்காது… ஆண்டர்சனை நாம் ஏன் கொண்டாடுகிறோம்?!
கிரிக்கெட்டை உண்மையாக ரசிப்பவர்கள் அதில் அடிக்கப்படும் சிக்ஸர்கள், எடுக்கப்படும் விக்கெட்கள், பிடிக்கப்படும் பவுண்டரி லைன் கேட்சுகளுக்காக ரசிப்பதில்லை. களத்தில் நிற்கும் அந்த வீரனின் அர்ப்பணிப்பே அந்த ரசிகனை கொண்டாடவைக்கும், கூச்சலிடவைக்கும், கண்ணீர் சிந்தவைக்கும். அப்படிப்பட்ட அர்ப்பணிப்புடன் கூடிய கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள்தான் வரலாற்றில் எப்போதும் நிலைத்து நிற்கும். அப்படி வரலாற்றில் எப்போதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும் ஒருவன்தான் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
வேகப்பந்து வீச்சாளரின் நான்கு முக்கியக் குணங்கள்:
ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஆக்ஷன், வேகம், துல்லியம், ஸ்விங் என இந்த நான்கும் மிக முக்கியமானவை. இந்த நான்கும் அழகாக, இயல்பாக, இசைவாகக் கைக்கூடுவது ஒரு சிலருக்கே சாத்தியம். அந்த ஒரு சிலரில் ஒருவர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
எண்கள் மட்டுமே சாதனைகள் அல்ல?!
ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை இறுதியில் எண்களில் சுருங்கிப்போவது துரதிஷ்டவசமானது. 704 விக்கெட்கள் எடுத்திருக்கிறார், உலகிலேயே அதிக விக்கெட்கள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர், 21 ஆண்டுகள் ஃபிட்னஸோடு விளையாடி இருக்கிறார் என்பதற்காகவெல்லாம் ஆண்டர்சனை நாம் கொண்டாடவில்லை. எண்கள் எப்போதும் இதயத்தை தொடுவதில்லை. அவை ஆன்மாவை சீண்டுவதில்லை. நமக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்துவதில்லை. அந்த எண்களுக்குப் பின்னால் உள்ள விளையாட்டு வீரனின் பயணமும், அர்ப்பணிப்பும், அவன் காட்டிய மனவுறுதியும், களத்தில் நிகழ்த்திய போராட்டமும், வெற்றிபெற்ற தருணங்களும்தான் அந்த வீரனைக் கொண்டாடவைக்கும், தீவிரமாகப் பின்பற்றவைக்கும்.
நடை, நிதானம், நிச்சயம்!
ஜேம்ஸ் ஆண்டர்சனின் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங்கில் இருக்கும் பக்குவம், கட்டுக்கடங்காத துல்லியம் மற்றும் ஒரு பேட்ஸ்மேனின் சிறிய பலவீனத்தை கூட பயன்படுத்திக் கொள்ளும் திறன் ஆகியவை எந்த பெளலருக்கும் நீண்டகாலம் கைகூடவில்லை. சிலர் வந்திருக்கிறார்கள், சில போட்டிகளில் திறமைகளைக் காட்டியிருக்கிறார்கள். பின்னர் காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து 21 ஆண்டுகள் என்பது வரலாற்றில் யாருமே செய்யாத சாதனை!
சவால்களைத் தாண்டிய வெற்றி!
22-05-2003-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக அறிமுகமான நாளிலிருந்து, சவால்களும், சறுக்கல்களும், காயங்களும் அவரை நெருங்கியபோதிலும், ஆண்டர்சன் ஒவ்வொரு பின்னடைவின் போதும் இன்னும் வலிமையாகவும், வேகமாகவும், அச்சுறுத்தக்கூடிய பவுலராகவும் மீண்டு வந்திருக்கிறார். அவரது இன்ஸ்விங், அவுட்ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் ஆகியவை பெரிய பேட்ஸ்மேன்களுக்கே பெரும் சவாலாகவே இருந்தன. பெளலிங்கில் புதுப்புது வித்தைகளை உருவாக்கிக்கொண்டேயிருந்தார் ஆண்டர்சன். இன்ஸ்விங், அவுட்ஸ்விங், ரிவர்ஸ், வாப்ளி என பெளலிங்கில் பல வேரியேஷன்கள். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஏற்ப டெக்னிக்ஸை மாற்றிக்கொண்டேயிருந்தார். அதனால்தான் ஒரு வேகப்பந்து வீச்சாளரால் 700 விக்கெட்டுகளுக்கும் மேல் சாய்க்க முடிந்தது.
கோலி Vs ஆண்டர்சன்
விராட் கோலி இன்று உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகக் கொண்டாடப்படுவதற்கு ஜேம்ஸ் ஆண்டர்சனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். 2014-ம் ஆண்டில் இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா ஆடியபோது விராட் கோலியின் பலவீனங்களை அவருக்கே எடுத்துக்காட்டியவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 5 டெஸ்ட் போட்டிகள், 10 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார் கோலி. இதில் நான்கு முறை ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார் என்பது மட்டுமல்ல, அவரின் பந்தைத் தொடுவதற்கே பயந்தார் கோலி. இந்த டெஸ்ட் தொடருக்குப்பின்னர்தான் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்வது எப்படி எனப் பாடம் கற்று அடுத்த சீசனில் இருந்து அவரை தைரியமாக எதிர்கொண்டார்.
அனைத்தும் கிரிக்கெட்டுக்கே!
"நான் விரும்பும் விளையாட்டிற்காக எனது அனைத்தையும் கொடுத்துள்ளேன் என்பது என்னுடைய மனசாட்சிக்குத் தெரியும். அதனால் நான் எந்த வருத்தமும் இல்லாமல் கிரிக்கெட்டை விட்டு வெளியேறுகிறேன்" என்று தனது கடைசி போட்டியின்போது குறிப்பிட்டார் ஆண்டர்சன்.
உண்மைதான் கிரிக்கெட்டுக்காக தன் ஆன்மாவையே கொடுத்திருக்கிறார் ஆண்டர்சன். இவரது பெயர் வெறும் சாதனை புத்தகங்களில் மட்டுமல்ல, விளையாட்டை விரும்பும் அனைவரின் இதயங்களிலும் நிலைத்திருக்கும். அவரது பெயர் எப்போதும் பயபக்தியுடன் உச்சரிக்கப்படும். அவரது சாதனைகள் எல்லா தலைமுறையினராலும் போற்றப்படும். எப்போதும் நினைவுகூறப்படும்!
உங்கள் பந்துகளைப் போலவே உங்கள் பங்களிப்பும் எப்போதும் நினைவில் நிற்கும் ஆண்டர்சன். மிஸ் யூ!