மெஸ்ஸியின் கண்ணீருக்கு இடையே கைகளில் தவழ்ந்த கோப்பை…மாவீரன் மார்ட்டினஸால் கோபா-வை வென்ற அர்ஜென்டினா!
அரங்கத்துக்கு வெளியே ரசிகர்களால் ஏற்பட்ட குழப்பம், இதனால் ஏற்பட்ட தாமதம், லயோனல் மெஸ்ஸியின் காயம், எக்ஸ்ட்ரா டைமில் மார்ட்டினஸின் மறக்கமுடியாத கோல் என ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தை படைத்திருக்கிறது கோபா அமெரிக்கா.
மெஸ்ஸியின் கண்ணீரும், மார்டினெஸின் மாவீரமும்!
கோபா அமெரிக்காவின் இறுதிப்போட்டி இரவு அர்ஜென்டினாவுக்கு வேதனை மற்றும் பரவசம் என இரண்டையும் கலந்து கொடுத்தது. அர்ஜென்டினா அணியின் இதயமும், ஆன்மாவுமான கேப்டன் லயோனல் மெஸ்ஸி, இரண்டாவது பாதியில் காலில் காயம் காரணமாக ஆடுகளத்தை விட்டு வெளியேறி, கண்ணீர் விட்டு அழுதது கால்பந்து உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மெஸ்ஸி களத்தில் இல்லாதது அர்ஜென்டினா அணிக்குள் பெரிய வெற்றிடத்தை உண்டுபண்ணியது. ஆனால் கோபா அமெரிக்காவின் கோல்டன் பூட் வெற்றியாளரான 26 வயது லாடரோ மார்ட்டினெஸ், மெஸ்ஸியின் வெற்றிடத்தை நிரப்பி அற்புதமான கோல் அடித்து, தொடர்ந்து இரண்டாவது கோபா அமெரிக்காவை மெஸ்ஸிக்கு காணிக்கையாக்கியிருக்கிறார்.
ஏஞ்சல் டி மரியாவின் நிறைவேறிய கனவு!
கொலம்பியாவுக்கு எதிரான போட்டி, முன்னணி வீவர் ஏஞ்சல் டி மரியா அர்ஜென்டினாவுக்காக ஆடிய 145வது மற்றும் அவரின் கடைசிப்போட்டி. சர்வதேச கால்பந்தாட்டத்துக்கு சாம்பியன் கோப்பையும், மகிழ்ச்சியின் நெகிழ்ச்சியுமாக விடைகொடுத்திருக்கிறார் ஏஞ்சல் டி மரியா. "இது ஏற்கெனவே எழுதப்பட்டது. என்னுடைய கால்பந்து முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் ஓய்வு பெற வேண்டும் என்று கனவு கண்டேன். அது நிறைவேறியிருக்கிறது" என்று டி மரியா பேசியபோது அவரது குரல் தழுதழுத்தது.
'’நான் இப்போது பல அழகிய நினைவுகளால் நிரம்பியிருக்கிறேன். நான் எப்போதும் விரும்பியதை அடைய எனக்கு உதவிய இந்த தலைமுறைக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இதை விட சிறந்த வழி என்ன இருக்கிறது? இறுதிப் போட்டியை அடைவது எளிதானது அல்ல… அதை வெல்வது அதைவிடவும் எளிதானது அல்ல… என் அணியினருக்கு நன்றி" என்று சொல்லியிருக்கிறார் ஏஞ்சல் டி மரியா.
அர்ஜென்டினாவின் வெற்றி அவர்களின் திறமை மற்றும் ஒற்றுமைக்கான ஒரு சான்றாக மட்டும் இல்லாமல், கால்பந்து உலகில் உணர்ச்சிகரமான ரோலர்கோஸ்டர் பயணத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது. மெஸ்ஸி, டி மரியா மற்றும் முழு அர்ஜென்டினா அணிக்கும், இந்த வெற்றி மற்றுமொரு வெற்றிக்கோப்பை என நினைக்கக்கூடிய அளவுக்கு அவ்வளவு சாதாரணமானதல்ல. பல வருட கடின உழைப்பு, தியாகம் மற்றும் அசைக்க முடியாத விடாமுயற்சியின் உச்சம் இது.
அர்ஜென்டினா கோபா அமெரிக்கா கோப்பையை மியாமி வானத்தில் பறக்கவிட்டு, வரவிருக்கும் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு மிகப்பெரிய வெற்றியை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை அழுத்தமாகப் பதித்திருக்கிறது!
இது காலகாலத்துக்கும் கால்பந்து ரசிகனின் நினைவில் நிற்கும் மெய் சிலிர்ப்பூட்டும் தருணம்!