பெங்களூருவில் கனமழையால் கட்டடம் இடிந்தது… சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்!
பெங்களூருவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை பல பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 22-ம் தேதியான இன்று, ஹென்னூர் அருகே பாபுஸ்பால்யா பகுதியில் கட்டுமான கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து, சுமார் 20 தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்க தீயணைப்பு மற்றும் மீட்பு குழுக்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. தற்போது வரை 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக பெங்களூரு நகரின் பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 27 ஆண்டுகளில் அக்டோபர் மாதத்தில் இவ்வளவு மழை பதிவானது இதுவே முதன்முறை.
யேலஹங்கா மற்றும் வட பெங்களூருவில் உள்ள வித்யாரண்யபுரா பகுதிகள் கனமழையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. யேலஹங்கா ஏரி நிரம்பி, கெந்திரியவிகார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இரண்டு முதல் மூன்று அடிகள் உயரத்திற்கு தண்ணீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. கொடிகேஹள்ளி, ஹோரமாவு போன்ற பகுதிகளில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், சாகர் நகர் வட்ட சாலை, மைசூரு சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
கனமழை காரணமாக மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ''2020-ம் ஆண்டிற்கு பின்னர், பெங்களூரு மாநகராட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், நகரின் நிர்வாகம் அதிகாரிகள் கையில் உள்ளது. இதனால் அரசியல்வாதிகள் பெங்களூருவைக் கண்டுகொள்வதில்லை. தேர்தல் இல்லாத நிலையில், பெங்களூரு நகரின் நிர்வாகத்தை அரசியல்வாதிகள் ஒதுக்கி வைத்துள்ளனர். எந்த அரசியல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் பொறுப்பெடுப்பதில்லை'' என்கின்றனர் பொதுமக்கள்.