பைக் இன்ஜினில் நடக்கும் கார் ரேஸ்… சென்னை ஃபார்முலா 4 ரேஸில் என்ன ஸ்பெஷல், என்ன சிக்கல்?!
சென்னை முதல்முறையாக ஸ்ட்ரீட் ரேஸுக்குத் தயாராகிவருகிறது. நாளை நடைபெற இருக்கும் இந்த ஃபார்முலா ரேஸ் என்பது சர்வதேச ரேஸ் போட்டியாக FIA-வால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கார் ரேஸை முன்னாள் ரேஸரான அக்பர் இப்ராஹிமும், ஐதராபாத்தை சேர்ந்த அகில் ரெட்டி என்பவரும் இணைந்து தொடங்கிய ரேஸிங் ப்ரமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம்தான் நடத்துகிறது.
இந்த நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் பாணியில் இந்தியன் ரேஸிங் லீக் என்கிற ரேஸ் போட்டியை நடத்தியது. பின்னர் ஃபார்முலா-1 ரேஸை நடத்தும் எஃப்ஐஏ அமைப்பிடம் இந்தியாவில் ஃபார்முலா-4 ரேஸை நடத்துவதற்காக அனுமதிபெற்று ரேஸ் போட்டிகளை நடத்திவருகிறது.
சென்னை மோட்டார் ஸ்போர்ட்ஸின் தலைநகரம்!
கார் ரேஸ், பைக் ரேஸைப் பொருத்தவரை இந்தியாவின் தலைநகரம் சென்னைதான். 1950-களில் இருந்தே சென்னையில் கார், பைக் ரேஸ் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. முதலில் ரெட்ஹில்ஸ் அருகேயுள்ள சோழாவரம் பகுதியில் ரேஸ் போட்டிகள் நடைபெற்று நடைபெற்றுவந்தன. பின்னர் 90-களில் சென்னை ஶ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள இருங்காட்டுக்கோட்டையில் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பால் ரேஸ் டிராக் அமைக்கப்பட்டது. பின்னர் கோயம்புத்தூரிலும் கரி மோட்டார் ஸ்பீட் வே என ரேஸ் டிராக் அமைக்கப்பட்டு சென்னை, கோவையில் தேசிய கார் ரேஸ் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
2011-ம் ஆண்டு உத்திரபிரதேச முதல்வராக மாயாவதி இருந்தபோது நொய்டாவில் புத் சர்வதேச ரேஸ் டிராக் கட்டப்பட்டு ஃபார்முலா-1 ரேஸ் போட்டிகள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் நடந்தது. பின்னர் FIA இந்தியாவில் ஃபார்முலா-1 ரேஸை நடத்துவதை கைவிட்டது.
இந்நிலையில்தான் ஆர்பிபிஎல் நிறுவனம் மூலம் ஃபார்முலா 4 ரேஸ் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் நடத்த திட்டமிட்டது. சென்னையில் முதல்முறையாக ரேஸ் டிராக்கிற்கு பதிலாக மொனாக்கோ, சிங்கப்பூரில் நடைபெறுவதுபோல மக்கள் பயன்படுத்தும் ஸ்ட்ரீட் டிராக்கில் நைட் ரேஸாக போட்டி நடைபெறுகிறது.
என்ன சிக்கல்?
மெரினா கடற்கரையைச் சுற்றிய சாலைகளில் ரேஸ் போட்டி நடைபெறுவதால் இது சுற்றுச்சூழலுக்கும், மருத்துவமனைகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும் என பலதரப்பில் இருந்தும் ரேஸை சாலைகளில் நடத்தக்கூடாது என வழக்குத்தொடரப்பட்டது. ஆனால், எஃப்ஐஏ அனுமதித்தால் போட்டியை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் இப்போது சென்னையில் முதல்முறையாக ஸ்ட்ரீட் ரேஸ் நடைபெற இருக்கிறது.
பைக் இன்ஜினில் கார் ரேஸ்?!
இந்த ஃபார்முலா 4 ரேஸ் பந்தயம் ஏப்ரில்லியா 1000சிசி பைக் இன்ஜின் பொறுத்தப்பட்ட சிங்கிள் சீட்டர் ரேஸ் கார்களில் நடைபெறுகிறது. 1000சிசி இன்ஜின்கொண்ட இதன் பிரேக் ஹார்ஸ் பவர் அதிகம் என்பதால் இதில் அதிகபட்சம் மணிக்கு 300கிமீட்டர் வேகம் வரை தொட முடியும். அதனால் மெரினா சாலையில் இந்தக் கார்கள் அதன் உச்சபட்ச வேகத்தை தொடும் என எதிர்பார்க்கலாம்.