ஐரோப்பாவின் அமைதி நாடான டென்மார்க்கும், ஸ்லோவேனியாவும் நேற்று யூரோ கோப்பை போட்டியில் ஜெர்மனியில் மோதின. இந்தப்போட்டியின் முக்கியமான ஐந்து தருணங்கள் இங்கே!
இரு அணிகளுமே அதிரடி ஆட்டமுறையை பின்பற்ற, யார் முதலில் கோல் அடிக்கப்போகிறார்கள் என்கிற பரபரப்பு மைதானத்தில் அதிகமாக இருந்தது. ஸ்லோவேனிய வீரரான செஸ்கோவின் (Benjamin Sesko) ஒரு சூப்பர் ஸ்ட்ரைக் கோல் கம்பத்தின் முனையில் பட்டு கோலாமல் போக, 1-0 லீட் எடுக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது ஸ்லோவேனியா.
ஸ்லோவேனியாவின் ஆட்டத்தில் அனல்பறக்க, டென்மார்க்கும் தொடர்ந்து தற்காப்பு ஆட்டம் ஆடாமல் இறங்கி அடக்கி ஆரம்பித்தது. டென்மார்க்கின் ஜோனாஸ் விண்ட் (Jonas Wind) தனது ஸ்டைலில் த்ரோ-இன் மூலம் பந்தை ஃபிளிக் செய்து எரிக்சனுக்கு (Christian Eriksen) அனுப்ப 17-வது நிமிடத்தில் போட்டியின் முதல் கோலை அடித்தார் எரிக்சன். முதல் பாதிவரை இந்த கோலை சமன் செய்ய ஸ்லோவேனியா எவ்வளவோ முயன்றும் அவர்களால் முடியவில்லை.
போட்டி முடிய 13 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், எரிக் ஜான்சா (Erik Janza) ஸ்லோவேனியாவுக்கான கோலை அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். கார்னரில் இருந்து வந்த பந்தை ஜான்ஸா கோல் போஸ்ட்டை நோக்கி அடிக்க டென்மார்க் டிஃபெண்டரான மோர்டன் ஹ்ஜுல்மண்டின்(Morten Hjulmand) முதுகில் பந்துபட்டு, கோல்கீப்பரான காஸ்பர் ஷ்மிச்செல்லைக் (Kasper Schmeichel) கடந்து பந்து கோல் போஸ்ட்டுக்குள் நுழைய ஆட்டம் 1-1 என சமனானது.
ஸ்லோவேனிய கோல் கீப்பரான ஜான் ஒப்லாக்கின் (Jan Oblak) ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்ததால் டென்மார்க்கால் அடுத்தடுத்த கோல்களை அடிக்கமுடியவில்லை. டென்மார்க்கின் ராஸ்மஸ் ஹொஜ்லண் கிட்டத்தட்ட கோல் அடித்துவிட்ட மகிழ்ச்சியில் இருக்க, அதை பாய்ந்து சென்று தடுத்தார் ஜான் ஒப்லாக். இந்த சேவ் மட்டும் இல்லையென்றால் டென்மார்க் 2-1 என வென்றிருக்கும்.
ஸ்லோவேனியாவின் ஆடம் க்னெஸ்டா செரின்(Adam Gnezda Cerin), பெஞ்சமின் செஸ்கோ இருவரின் ஆட்டத்திலும் அனல் பறந்ததால் டென்மார்க் வீரர்கள் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இன்னொரு கோல் அடிக்கும் வாய்ப்பை உருவாக்காமல், டிஃபென்ஸ் ஆடும் நிலைக்குத்தள்ளப்பட்டனர். இதையே பெரிய வெற்றியாக கொண்டாட ஆரம்பித்துவிட்டர் ஸ்லோவேனிய ரசிகர்கள். ஆட்டம் டிராவில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.