பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 : வரலாற்றையே மாற்றி எழுதிய பிரான்ஸ்… பிரமாண்டமாக தொடங்கிய போட்டிகள்!
கடந்த சில ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளின் மீதான புகழ்வெளிச்சமும், ரசிகர்களின் ஆர்வமும் குறைந்துகொண்டே போக 2021 டோக்கியோவில் கொரோனா காரணமாக கிட்டத்தட்ட பார்வையாளர்களே இல்லாமல் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தச் சூழலில் 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸை உலகம் முழுக்க உள்ள மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க பிரான்ஸ் பல்வேறு திட்டங்களை வகுத்தது. அதில் ஒன்றுதான் மைதானத்தில் இல்லாமல் பொதுவெளியில் தொடக்க விழாவை நடத்துவது என்கிற துணிச்சலான முடிவு.
பாரிஸின் குறுக்கே பாயும் செயின் ஆற்றில் மிதக்கம் பேரணி அதன் முடிவில் தொடக்கவிழா அரங்கத்தில் நிகழ்வு என்கிற இந்த முடிவுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும், தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்றெல்லாம் சொல்லப்பட்டன. அதை நிரூபிக்கும்வகையில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக பாரிஸில் உள்ள ரயில் பாதைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டு ரயில்கள் செல்லமுடியாத சூழல் உருவானது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் ஆங்காங்கே முடங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், இது அனைத்தையும் மீறி பிரான்ஸ் ஒரு பிரமாண்டமான, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையிலான சிறப்பான தொடக்கவிழாவை அரங்கேற்றியிருக்கிறது.
இந்திய நேரப்படி நேற்றிரவு 11 மணிக்குத் தொடங்கிய தொடக்கவிழா நிகழ்வு கிட்டத்தட்ட 4 மணி நேரம் வரை நீடித்தது. பிரெஞ்சுப் புரட்சியின் போது ராணி சிறைபிடிக்கப்பட்ட செயின் கரையோரத்தில் தலையில்லாத ராணி மேரி அன்டோனெட் இருப்பதுபோன்ற காட்சி கலை நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக இடம்பெற்றது.
சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் அறியாமை என மூன்று கருப்பொருட்களை எடுத்துக்கொண்டு அதன்படி தொடக்கவிழா நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தது. கலை நிகழ்ச்சிகளின் இயக்குநராக பிரான்ஸின் புகழ்பெற்ற நாடக இயக்குநர் தாமஸ் ஜாலி பொறுப்பேற்று சிறப்பாக நடத்தினார். பிரான்ஸின் வரலாறு, கலாசாரம் மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பெண்களுக்கிடையே சகோதரத்துவத்தைக் குறிக்கும் வகையில் இளஞ்சிவப்பு (பிங்க்) இறகுகளை அணிந்தபடி லேடி காகா, ''Mon truc en Plume" பாடலைப் பாடினார். மெட்டல் பேண்ட் கோஜிரா மற்றும் பிரான்ஸின் பிரபல பாப் பாடகி ஆயா நகமுரா ஆகியோர் பிரான்ஸின் இயல் இசையை ரசிகர்கள் முன் கொண்டு வந்தனர்.
ஈபிள் டவர் லைட் ஷோவுக்குப்பிறகு பிறகு "ஹிம் டு லவ்" என்ற பாடலை பிரபல பாப் பாடகி செலின் டியான் பாடினார். 1996 அட்லான்டிக் ஒலிம்பிக் தொடக்கவிழாவின் போதும் செலின் டியோன் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. மழையின் குறுக்கீடுகளுக்கு இடையே பிரான்ஸின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ‘’2024 ஒலிம்பிக்ஸ் ஓப்பன்'’ என அறிவிக்க வானில் வான வேடிக்கைகள் நிகழ்ந்தன.
பல்வேறு கேள்விகள், அச்சுறுத்தல்களை மீறி பிரான்ஸ், ஒரு பிரமாண்டமான விளையாட்டுத் திருவிழாவை தொடங்கிவைத்திருக்கிறது. கலை, கலாசாரம், மற்றும் சகோதரத்துவம் நிரம்பிய இந்த நிகழ்வு, உலகம் முழுக்க பார்வையாளர்களின் இதயங்களை வென்றிருக்கிறது.
ஒலிம்பிக்கின் வண்ணமயமான ஐந்து வளையங்களுக்கு இடையே பிரான்ஸ் அச்சத்தைப் போக்கி மக்களிடையே ஒற்றுமையையும் துணிவையும் விதைத்திருக்கிறது!