2024 யூரோ கோப்பை போட்டிகள் நள்ளிரவு 12.30 மணிக்கு ஜெர்மனியில் தொடங்கியது. போட்டியை நடத்தும் ஜெர்மனியும், ஸ்காட்லாந்தும் முதல் போட்டியில் மூனிச் நகரில் உள்ள அலையன்ஸ் அரங்கத்தில் மோதின. அபாரத் திறமை, அசரடிக்கும் வியூகங்கள், மறக்கமுடியாத தருணங்களின் தொகுப்பாக இந்தப்போட்டி அமைந்திருந்தது. இந்த ஆட்டத்தின் 5 முக்கிய தருணங்கள் இங்கே!
ஜெர்மனி நடுவர் விசில் அடித்ததில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 21 வயதேயான மிட்ஃபீல்டரான ஃப்ளோரியன் விர்ட்ஸ் (Florian Wirtz) ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் ஜெர்மனிக்கான முதல் கோலை அடித்தார். ஜோஷுவா கிம்மிச் (Joshua Kimmich) இடமிருந்து ஒரு துல்லியமான பாஸைப் பெற்று, விர்ட்ஸ் பந்தை கோல் போஸ்ட்டுக்குள் மிகச்சரியாக உதைத்துத் தள்ளி, ஸ்காட்லாந்து அணியை டிஃபென்ஸ் ஆடும் மோடுக்குத்திருப்பினார் விர்ட்ஸ்.
முதல் கோலுக்கு அடுத்த ஒன்பது நிமிடங்களுக்குப் பிறகு, மற்றுமொரு 21 வயது மிட்ஃபீல்டரான ஜமால் முசியாலா (Jamal Musiala) ஜெர்மனியின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார். இல்கே குண்டோகன் (lkay Gündogan) ஸ்காட்டிஷ் டிஃபென்ஸிடம் இருந்து பந்தைப் ப்பறித்து அதை காய் ஹேவெர்ட்ஸ்(Kai Havertz) பக்கம் நழுவித்தள்ள, காய் ஹாவெர்ட்ஸ் அதை முசியாலா பக்கம் ஒதுக்கித் தள்ள, முசியாலா அதை கோலாக்கினார்.
ஸ்காட்லாந்தின் ரியான் போர்டியஸ் (Ryan Porteous) கோல் போஸ்ட்டுக்கு முன் குண்டோகனின் காலை உதைத்துதள்ள அது பெனால்ட்டியானது. போர்ட்டியஸுக்கு ரெட் கார்டும் கொடுக்கப்பட்டது. இந்த பெனால்டி கிக் வாய்ப்பு ஹேவர்ட்ஸுக்கு கொடுக்கப்பட அவர் எந்தப்பிசிறும் இல்லாமல் அதை கோலாக்க, ஜெர்மனி 3-0 என முன்னிலைப்பெற்றது. போர்டியஸ் வெளியேறியதால் 10 வீரர்களுடன் ஆடும் நிலைக்குத்தள்ளப்பட்டது ஸ்காட்லாந்து.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜெர்மனியின் மாற்று வீரராக களத்துக்குள் வந்த நிக்லாஸ் ஃபுல்க்ரக் (Niclas Füllkrug) ஜெர்மனியை 4-0 லீடுக்கு கொண்டுபோனார். க்ளோஸ் ரேஞ்சில் இருந்து ஒரு பவர்ஃபுல் ஷாட் ஆடி பந்தை கோல் போஸ்ட்டுக்குள் நுழைத்தார் நிக்லாஸ் ஃபுல்க்ரக்.
ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் அன்டோனியோ ருடிகரின் (Antonio Rüdiger) சொந்த கோலின் மூலம் ஸ்காட்லாந்து ஒரு கோல் பெற்றது. இதற்கு அடுத்து ஆட்டம் முடிய ஒரு சில விநாடிகளே இருக்கும் நிலையில் கர்லிங் ஷாட் மூலம் எம்ரே கேன் (Emre Can) ஐந்தாவது கோல் அடித்தார். இதனால் 5-1 என்கிற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றிபெற்றது.