INDvNZ : மீண்டும் ஓர் தோல்வியா… 91 ரன்களுக்கு ஆறு விக்கெட்களை இழந்த இந்தியா… மீளுமா?!
நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்றுவருகிறது. நேற்று நடந்த முதல் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸை ஆடத்தொடங்கியது. நேற்றே கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்டம் இழந்துவிட்ட நிலையில், இன்று காலை ஆட்டம் தொடங்கியது.
ஷுப்மன் கில்லும், ஜெய்ஸ்வாலும் களத்தில் இருந்தனர். இந்தியாவின் ஸ்கோர் 50-ஐ தொட்டபோது கில் அவுட் ஆனார். மிட்செல் சான்ட்னர் இந்த விக்கெட்டைத் தூக்க, வந்த வேகத்தில் விராட் கோலியும் அடுத்து அவுட் ஆனார். இதன்பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்துவிட்டன.
உணவு இடைவேளுக்கு முன்பு வெறும் 91 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்களை இழந்துவிட்டது இந்தியா. சான்ட்னர் 4 விக்கெட்கள் எடுக்க, கிளென் ஃபிலிப்ஸ் 2 விக்கெட்கள் எடுத்திருக்கிறார். தற்போது ரவீந்திர ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் களத்தில் உள்ளனர். இந்தியா 108 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து விளையாடிவருகிறது. இன்னும் 151 ரன்கள் இந்தியா பின் தங்கியிருக்கிறது.