ஜெர்மனியில் நடைபெற்றுவரும் யூரோ 2024 (euro2024) போட்டித்தொடரில் இத்தாலி மற்றும் அல்பேனியாவுக்கு எதிரான ஆட்டம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது. போட்டியின் முக்கிய தருணங்கள் இங்கே!
யூரோ கோப்பையின் நடப்பு சாம்பியனான இத்தாலிக்கு போட்டி தொடங்கிய 23-வது விநாடியிலேயே அதிர்ச்சி அளித்தது அல்பேனியா. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வரலாற்றில் இதுவரை இல்லாத வேகமான கோலை அல்பேனியாவின் நெடிம் பஜ்ராமி (Nedim Bajrami) எந்தவிதமான கடுமையான முயற்சிகளும் இல்லாமல் ஈஸியாக அடித்தார். இத்தாலியின் டிஃபென்ஸுக்குள் நுழைவது இவ்வளவு சுலபமா என்கிற கேள்வியை இந்த கோல் இத்தாலி ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.
இத்தாலி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும்விதமாக அடுத்த 11வது நிமிடத்திலே லோரென்சோ பெல்லெக்ரினியின் (Lorenzo Pellegrini) ஷார்ட் கார்னரில் இருந்து பாஸ்டோனி(Bastoni)யின் ஹெடர் மூலம் இத்தாலி 1-1 என சமன் செய்தது.
காயத்தில் இருந்து திரும்பிய பரேல்லா(Barella), ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பாக்ஸுக்கு வெளியே ஒரு ஸ்ட்ரைக் மூலம் கோல் அடித்து இத்தாலிக்கு 2-1 என லீட் கொடுத்தார். இதன்பிறகு இரு அணிகளுமே எவ்வளவோ முயற்சித்தும் கோல் அடிக்கமுடியவில்லை. இறுதியில் இத்தாலி 2-1 என வென்றது.
இத்தாலியின் சூப்பர் ஸ்டார் ஜியான்லூகி டோனாரும்மா கோல் கீப்பராக இருக்கும்போதே 23 விநாடிகளில் அல்பேனியா கோல் அடிக்க காரணம் சிரி ஏ- லீக் விளையாடும் வீரர்களால் அல்பேனியா அணி நிரம்பியிருந்ததுதான். ஆனாலும் இத்தாலி தனது வேகமான, துல்லியமான பாசிங் மூலம் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திவிட்டது.
மத்திய டிஃபண்டர் ரிக்கார்டோ கலாஃபியோரி (Riccardo Calafiori)க்கு இதுதான் மூன்றாவது ஆட்டம். அனுபவம் இல்லையென்றாலும் அவரது ஆட்டமும், மைதானத்தில் அவர் காட்டிய பக்குவமும் வியக்கவைத்தது. அதேபோல் கடந்த செப்டம்பரில்தான் ராபர்டோ மான்சினி(Roberto Mancini)க்கு பதிலாக இத்தாலியின் புதிய பயிற்சியாளர் ஆனார் லூசியானோ ஸ்பாலெட்டி( Luciano Spalletti). எட்டே மாதங்களில் இளம் அணியை பட்டைதீட்டி உருவாக்கி ஓப்பனிங்கிலேயே கொண்டாடவைத்திருக்கிறார் ஸ்பாலெட்டி
இனிதான் இத்தாலிக்கு சோதனையே இருக்கிறது. நேற்று குரோஷியாவை 3-0 என்ற கணக்கில் ஈஸியாக வென்ற ஸ்பெயின் வரும் வியாழன் அன்று இத்தாலியுடன் மோத இருக்கிறது. இந்த ஆட்டம்தான் இந்த உலகக்கோப்பையின் மிக முக்கியமான ஆட்டமாக இருக்கும் என இப்போதே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு பரவ ஆரம்பித்திருக்கிறது.