Argentina vs Columbia : மெஸ்ஸி எனும் மாபெரும் பயணத்தின் கடைசி அத்தியாயம்... கோப்பை கைகூடுமா?
மெஸ்ஸியின் மாபெரும் பயணம்!
உலகின் மிகச்சிறந்த வீரர்தான். ஆனால், அவரால் அர்ஜென்டினாவுக்கு எந்த பயனும் இல்லை என்கிற விமர்சனங்களை தனது மாபெரும் பயணத்தின் கடைசி அத்தியாயத்தில் உடைத்துவருகிறார் லயோனல் மெஸ்ஸி. ஏற்கெனவே 2021-ல் நடந்த கோபா அமெரிக்கா, 2022 உலகக்கோப்பை எனத்தொடர்ந்து மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டினா கோப்பைகளை வென்றுவரும் நிலையில் நாளை வென்றால் தொடர்ந்து கோபா அமெரிக்காவை தக்கவைத்த சாதனையைப் படைப்பார் மெஸ்ஸி.
லியோனல் மெஸ்ஸி, எமிலியானோ மார்டினெஸ், கிறிஸ்டியன் ரொமேரோ, ரோட்ரிகோ டி பால், மற்றும் ஏஞ்சல் டி மரியா எனப் பல முக்கிய வீரர்களைக் கொண்ட உலகின் பலம்வாய்ந்த அணியாக இருக்கிறது அர்ஜென்டினா. 37 வயதான மெஸ்ஸி அர்ஜென்டினாவுக்காக ஆடும் கடைசி ஆட்டமாக இது இருக்கலாம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்த இறுதிப்போட்டி!
கொலம்பியாவின் ஆச்சரியம்!
பயிற்சியாளர் நெஸ்டர் லோரென்சோவின் வழிகாட்டுதலின்படி கொலம்பியாவும் இந்த கோபா அமெரிக்கா தொடரில் சிறப்பாக விளையாடி நான்கு வெற்றிகள் மற்றும் ஒரு டிராவுடன் தோல்வியைச் சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், லூயிஸ் டியாஸ், மற்றும் டேவின்சன் சான்செஸ் என்கிற இந்த மூன்று வீரர்களும்தான் கொலம்பியாவின் சூப்பர் ஸ்டார்ஸ்.
அர்ஜென்டினாவின் பலம் என்ன?!
அர்ஜென்டினாவின் பலம் அவர்களின் உறுதியான தற்காப்பு மற்றும் லயோனல் மெஸ்ஸியின் அனுபவம் மற்றும் ஆட்ட நுணுக்கம். கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸை மீறி கோல் போஸ்ட்டுக்குள் கொலம்பிய வீரர்கள் பந்தை நுழைப்பது அவ்வளவு எளிதல்ல. அதேப்போல் ரோட்ரிகோ டி பால், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் மற்றும் என்ஸோ ஃபெர்னாண்டஸ் ஆகியோரின் மிட்ஃபீல்ட் ஆட்டம் அர்ஜென்டினாவுக்கு பெரும்பலம். இவர்கள் மூவரும் பந்தை கட்டுப்படுத்துவதிலும், மெஸ்ஸி மற்றும் ஏஞ்சல் டி மரியாவுக்கு சரியான நேரத்தில் பாஸ்களை வழங்குவதிலும் முக்கியமானவர்கள். லாடரோ மார்டினெஸ், மெஸ்ஸிக்கு இணையாக கொலம்பியாவின் டிஃபென்ஸை உடைப்பதில் முக்கியமானவராக இருப்பார்.
அதிர்ச்சி தருமா கொலம்பியா?
கொலம்பியாவின் ஆட்ட வியூகம் என்பது கோலைக் கொடுக்காமல் பாதுகாப்பாக ஆடுவது மற்றும் விரைவான எதிர்த் தாக்குதல்களில் கவனம் செலுத்துவது என்பதாகத்தான் இருக்கும். ஜேம்ஸ் ரோட்ரிகஸின் அசாத்திய திறமை மற்றும் லூயிஸ் டியாஸின் வேகம் கொலம்பியாவுக்கு சாதகமாக இருக்கும்.
நேருக்கு நேர்!
கோபா அமெரிக்கா வரலாற்றில் அர்ஜென்டினாவும் கொலம்பியாவும் 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அர்ஜென்டினா இதில் ஏழு முறை வெற்றிபெற்றிருக்க, கொலம்பியா மூன்று முறையும், ஐந்து போட்டிகள் டிராவிலும் முடிவடைந்துள்ளன.
மெஸ்ஸிக்காக!
நாளை நடைபெறும் போட்டியில் அர்ஜென்டினா வெற்றிபெற்றால், 16-வது முறையாக கோபா அமெரிக்காவை வென்ற சாதனையைப் படைக்கும் என்பதோடு, தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை மெஸ்ஸியின் கைகளில் தவழும். கோபா அமெரிக்கா 2024 இறுதிப் போட்டி லியோனல் மெஸ்ஸியின் சகாப்தத்தின் அழகிய க்ளைமேக்ஸாக இருக்கும். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத விறுவிறுப்பான ஆட்டம், ரசிகர்களின் கட்டுக்கடங்காத உற்சாகம் மற்றும் மறக்க முடியாத தருணங்களை பரிசாகத் தரப்போகும் இப்போட்டியில், அர்ஜென்டினா - கொலம்பியா மோதுவதை உலக அளவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இது வெறும் ஒரு போட்டியல்ல... லயோனல் மெஸ்ஸி எனும் மாவீரனின் மாபெரும் பயணத்தின் கடைசி அத்தியாயம். மெஸ்ஸி மாயஜாலங்கள் நிகழ்த்துவரா?