நீரஜ் சோப்ராவின் தங்கக்கனவு பறிபோனது… இறுதி கட்டத்தை எட்டும் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 5 பதக்கம்!
கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கிய 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் தங்கக் கனவு நேற்றிரவு பறிபோனது. ஈட்டி எறிதலில் உலக சாதனைகள் படைத்துவந்த நீரஜ் சோப்ராவை பாகிஸ்தான் வீரர் வீழ்த்தி தங்கம் வென்றார். 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி புதிய ஒலிம்பிக் சாதனைப்படைத்து தங்கம் வென்றார் அர்ஷத் நதீம். இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45மீட்டர் தூரம் வீசி இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதுவரை பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியா துப்பாக்கிச் சுடுதலில் மூன்று வெண்கலப் பதக்கங்களையும், ஹாக்கியில் ஒரு வெண்கலப்பதக்கத்தையும், தடகளத்தில் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் வென்றிருக்கிறது. இன்று இரவு மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் புவேர்ட்டோ ரிக்காவின் டேரியன் குரூஸை எதிர்கொள்கிறார். இந்தப்போட்டியில் அமன் வென்றால் இந்தியாவுக்கு இன்னொரு வெண்கலப்பதக்கம் கிடைக்கும்.
இதுதவிர கோல்ஃபில் இந்தியாவின் அதிதி அசோக் பதக்கம் வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது ஐந்து பதக்கங்களுடன் ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் இந்தியா 64வது இடத்தில் இருக்கிறது. சீனாவை ஒரு தங்கப்பதக்க வித்தியாசத்தில் பின்னுக்குத்தள்ளி 30 தங்கம், 38 வெள்ளி, 35 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. சீனா 29 தங்கம், 25 வெள்ளி, 19 வெண்கலம் என 73 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்க, ஆஸ்திரேலியா 18 தங்கம்,14 வெள்ளி,13 வெண்கலம் என 45 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
வெல்வாராஅதிதி?!