ஜெர்மனியில் நடந்துவரும் யூரோ கோப்பை 2024 போட்டிகளில் நெதர்லாந்துக்கும், போலாந்துக்கும் இடையேயான ஆட்டம் நேற்று மாலை நடைபெற்றது. பரபரப்பான இந்தப்போட்டியில் திருப்பங்களுக்கும், தடாலடி மாற்றங்களுக்கும் பஞ்சமில்லை. ஆட்டத்தின் முக்கியமான நான்கு தருணங்கள் இங்கே!
போட்டி ஆரம்பித்ததுமே யாரும் எதிர்பாராதவகையில் முதல் கோல் அடித்து நெதர்லாந்துக்கு அதிர்ச்சி அளித்தது போலந்து. ஆடம் புக்ஸா(Adam Buksa)வின் ஹெட்டர் நெதர்லாந்து கோல்கீப்பர் பார்ட் வெர்ப்ரூக்கனைக்(Bart Verbruggen) கடந்து கோல் போஸ்ட்டுக்குள் நுழைய முதல் கோல் அடித்தது போலந்து. இந்த கோல் நெதர்லாந்தின் பின்னடைவை எடுத்துரைத்ததுடன் பரபரப்பான போட்டிக்கு களம் அமைத்துக் கொடுத்தது.
முன்னாள் சாம்பியன்களான நெதர்லாந்து, பயிற்சியாளர் ரொனால்ட் கோமனின் (Ronald Koeman) வழிகாட்டுதலின் கீழ், பதட்டப்படாத புத்திசாலித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. போட்டி முதல் பாதி முடிவை நெருங்கிக்கொண்டிருக்க, பல டிஃபண்டர்களைக் கடந்து கக்போ (Cody Gakpo) போலந்தின் பெனால்டி பகுதியை நோக்கிப்போனார். கோல் போஸ்ட்டை நோக்கிய அவரது ஸ்ட்ரைக் போலந்து வீரரின் காலிலேயே பட்டு, கோல்கீப்பர் வோஜ்சிக் ஸ்செஸ்னியைக் கடந்து வலைக்குள் விழுந்தது. இந்த ஈக்வலைசர் கோல்தான் போட்டியின் இரண்டாம் பாதியில் ஆட்டம் அனல் பறக்க வழிவகுத்தது.
2022 கத்தார் உலகக்கோப்பையில் அர்ஜென்டினாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா எளிதாக வெற்றிபெற இருந்த நிலையில் நெதர்லாந்தின் வூட் வெகோர்ஸ்ட்(Wout Weghorst)தான் 2 கோல்கள் அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தார். அதனால் டென்ஷனான தருணங்களில் டென்ஷன் ஆகாமல் சரியான நேரம் பார்த்து கோல் அடிப்பதில் வல்லவர் இந்த வூட் வெகோர்ஸ்ட். போலந்துக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் அதேபோன்ற ஒரு வல்லமையை காட்டினார் வூட். ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்த நிலையில் 83-வது நிமிடத்தில் நாதன் ஏகேயின் திசைதிருப்பப்பட்ட பாஸைப் பயன்படுத்தி அற்புதமான தனது ஸ்டிரைக் மூலம் அதை கோலாக மாற்றினார் வூட் வெகோர்ஸ்ட். நெதர்லாந்து 2-1 என முன்னிலை பெற்று இறுதியில் வெற்றிபெற்றது.
ஆட்டம் சமநிலையில் இருந்தபோது, நெதர்லாந்தின் பயிற்சியாளர் ரொனால்ட் கோமன் முக்கியமான மாற்றங்களைச் செய்தார். அதுவரை பென்ச்சில் இருந்த Jeremie Frimpong மற்றும் Wout Weghorst என இரண்டு முக்கிய வீரர்களையும் களத்தில் இறக்கினார். இது அணிக்குள் புதிய ஆற்றலையும், வேகத்தையும் கொண்டுவந்தது. ஃபிரிம்பாங்கின் ஒரு ஷாட் கிட்டத்தட்ட கோலாகியிருக்கவேண்டியது. அது மிஸ்ஸானாலும் வெகோர்ஸ்ட் அடுத்து கோல் அடித்துவிட்டார். அதனால் இது கோமனின் கிடைத்த வெற்றி எனக்கொண்டாடுகிறார்கள் நெதர்லாந்து ரசிகர்கள்!