35 சதவிகித கொழுப்பு… கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே ஆபத்துதான்!
இந்திய அணி மற்றும் மும்பை, ஐபிஎல் அணிகளுக்ககா கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவருபவர் பிரித்வி ஷா. இளம் வயதிலேயே பல சாதனைகள் படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இவரது பயணம் ஊக்கமருந்து உட்பட சில பல பிரச்சனைளால் தடைபட்டது.
தற்போது மும்பை அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடிவரும் பிரித்வி ஷா கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. ரஞ்சி டிராஃபி 2024 ஆட்டங்களில் அவர் 7, 12, 1, மற்றும் 39 என்ற குறைந்த ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால் அவரது தகுதி குறித்து கேள்வி எழுந்தது. இருந்தாலும், ஷாவை அணியில் இருந்து நீக்கியதற்கான முக்கிய காரணம் அவரது உடல் நிலையின்மை மற்றும் சீரற்ற பயிற்சி என மும்பை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரித்வி ஷாவின் உடல் கொழுப்பு சுமார் 35 சதவீதமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். இது மிக அதிகமானதாகக் கருதப்படுவதால், அவர் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் பருமனை குறைத்த பின்னரே அணிக்கு மீண்டும் தேர்வாக வேண்டிய அவசியம் இருப்பதாக கூறப்படுகிறது. "அவர் தற்காலிகமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார், உடல் பருமனை குறைக்க வேண்டும், பின்னர் தேர்வாக வேண்டும்" என்று மும்பை கிரிக்கெட் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கீனமான அணுகுமுறை மற்றும் உடல் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காததன் காரணமாக, மும்பை அணியின் தேர்வுக் குழு பிரித்வி ஷாவின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளது.
பிரித்வி ஷா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்ல எல்லா ஆண்களுக்குமே 35 சதவிகித கொழுப்பு என்பது ஆபத்தானது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆண்களுக்கு உடலில் 25 சதவிகிதம் வரை கொழுப்பு இருக்கலாம். இதற்கு மேல் போனால் உடல் சோர்வு ஏற்படுவதோடு, பல்வேறு விதமான உடல் மற்றும் மனப் பிரச்சனைகள் ஏற்படும். விளையாட்டு வீரர்களைப் பொருத்தவரை காயமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதோடு, குணமாகவும் அதிக காலம் தேவைப்படும் என்கின்றனர்.