ஒலிம்பிக்ஸ் 2024 : விடைபெற்றார் பி.வி.சிந்து… தங்கத்தை நோக்கியப் பயணம் பாதியிலேயே முடிந்தது ஏன்?
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வார் என்பது வெறுமனே வெற்று நம்பிக்கையோ, பொய் கணிப்போ அல்ல… மென்ட்டலாகவும் சரி, ஃபிட்னஸிலும் சரி முன்னெப்பதையும்விட இந்த முறை மிகவும் வலுவாகவே இருந்தார் சிந்து. அவரது ஆட்டமுறையில் மிகப்பெரிய நம்பிக்கைத் தெரிந்தது. லீக் போட்டிகளில் எல்லாம் சர்வசாதாரணமாக நேட் செட்களில் எதிர் வீராங்கனைகளை வீழ்த்தினார். அதனால்தான் இந்தமுறை சிந்துவின் மேல் எல்லோரும் பெரும் நம்பிக்கை வைத்தார்கள்.
ஆனால், விளையாட்டைப் பொருத்தவரை அந்த நாள், அந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். வீழ்த்தவே முடியாது எனச்சொல்லப்பட்டவர்கள் எல்லாம் மண்ணைக் கவ்வியிருக்கிறார்கள். அதனால் விளையாட்டைப் பொருத்தவரை அன்றைய போட்டியில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களால்தான் வெற்றிபெறமுடியும்.
காலிறுதிக்கு முந்தைய சுற்று. 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தான் தோற்கடித்து வெண்கலம் வென்ற சீனாவின் ஹீ பிங்ஜியாவோதான் எதிரில் நிற்கும் வீராங்கனை. சிந்து தான் ஏற்கெனவே வீழ்த்திய வீராங்கனைதானே என்கிற நம்பிக்கையோடு களத்தில் நிற்க, எதிரில் நின்றவரோ சிந்துவைப் பழிதீர்க்க நின்றுகொண்டிருந்தார். பி.வி.சிந்துவைவிட சீன வீராங்கணையின் உடல்மொழியிலும் சரி, அவரது ஆட்டமுறையிலும் சரி ஒரு சிங்கத்தின் கர்ஜனை இருந்தது. பி.வி.சிந்துவின் உடல் மீதே ஸ்மாஷ் ஷாட்களை விளாசி அவரை அச்சமூட்டினார்.
முதல் செட்டில் சிந்துவும் பிங்ஜியாவோவும் தலா 19-19 என சமநிலையில் இருந்தபோது பிங்ஜியாவோவின் ஆட்டத்தின் வேகம் பலமடங்கு கூடியது. பழிதீர்க்கவேண்டும் என்கிற வெறி அதிகம் இருந்தது. முதல்செட்டை 21-19 என கைப்பற்றியவர், இரண்டாவது செட்டை 21-13 என இன்னும் சுலபமாக வென்றார்.
சிந்துவுக்கு இடது கை வீரர்களுடன் விளையாடுவது தொடர்ந்து பிரச்சனையாகவே இருக்கிறது. சிந்துவை சென்ட்டர் கோர்ட்டில் நிறுத்தி ஆடவைத்த சீன வீராங்கனையின் டெக்னிக் அவருக்கு அதிகம் கைகொடுத்தது. நெட்டுக்கு முன்னால் வரவைப்பது, அடுத்த ஷாட்டையே நெட்டுக்குப்பின்னால் தூக்கியடிப்பது என சிந்துவை டயர்ட் ஆக்கும் ஆட்டமுறையைக் கையாண்டார் பிங்ஜியாவோ. சிந்துவின் ஸ்மாஷ்களைவிட பிங்ஜியாவோவின் ஸ்மாஷ்கள் அதிரடியாக இருந்தன. திருப்பி அடிக்கமுடியாத அளவுக்கு மின்னலாக அவை சீறிப்பாய்ந்தன.
ஒவ்வொரு விளையாட்டு வீரரும் வாழ்க்கையில் ஒரு பெரிய கனவுகளோடு பயணிக்கின்றனர். அந்த பயணத்தில் வெற்றிகளும் தோல்விகளும் கலந்தே இருக்கும். அந்த தோல்விகளிலிருந்து எழுந்து வருவதுதான் உண்மையான வீரர்களின் போர்க்குணம். பிவி சிந்துவுக்கு இந்த ஒலிம்பிக்ஸ் ஒரு பாடமாக இருக்கும். சிந்துவின் தங்கக் கனவு கொஞ்சம் தள்ளிப்போனாலும், அது நிச்சயமாக ஒருநாள் நிறைவேறும்!
காத்திருப்போம்!